பாகற்காய் தோட்டங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு


பாகற்காய் தோட்டங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் உள்ள பாகற்காய் தோட்டங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது. ேமலும் பரிந்துரைத்த அளவில் பூச்சிக்கொல்லி பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் உள்ள பாகற்காய் தோட்டங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது. ேமலும் பரிந்துரைத்த அளவில் பூச்சிக்கொல்லி பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியது.

அதிகாரிகள் குழு ஆய்வு

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் பாகற்காய் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றம் காரணமாக பாகற்காய் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறியது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஊட்டி தோட்டக்கலை இணை இயக்குனர் கருப்பசாமி தலைமையில் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் விஜயலட்சுமி, அனிதா, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் (உளவியல் துறை) விஜயகுமார், இணை பேராசிரியர் (நோயியல் துறை) ராஜேந்திரன், இணை பேராசிரியர் (பூச்சியியல் துறை) வினோத் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கூடலூர் வட்டாரத்தில் உள்ள பாகற்காய் தோட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

விவசாயிகளுக்கு ஆலோசனை

அப்போது பாடந்தொரை பகுதியில் பாகற்காய் செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்பட்டது. ஸ்ரீமதுரை, கூடலூர் பகுதிகளில் அடிசாம்பல் நோய் பரவலாக காணப்பட்டது. மேலும் மாறி வரும் காலநிலை காரணமாக இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறி வருவது தெரியவந்தது. இது தொடர்பாக தோட்டக்கலை அதிகாரிகள் குழு, விவசாயிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சில நாட்கள் இடைவெளியில் பூச்சிகொல்லி மற்றும் நோய் கொல்லி மருந்துகளை தெளித்ததாக விவசாயிகள் கூறினர். பின்னர் விவசாயிகள் பயன்படுத்திய மருந்துகள், அவற்றின் அளவுகள் குறித்து அதிகாரிகள் குழு கேட்டறிந்தது. அதில், பரிந்துரைத்த அளவுகளை விட அதிகமாக மருந்துகளை பயன்படுத்தியதால் சில பகுதிகளில் பாகற்காய் இலைகள் கருகியது தெரியவந்தது. இதுகுறித்து விவசாயிகளுக்கு, தோட்டக்கலை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.

நோய் எதிர்ப்பு திறன்

இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:-

பூச்சிக்கொல்லி, நோய்கொல்லி மற்றும் எம்.என்.மிக்சர் மருந்துகளை ஒன்றாக கலந்து தெளிக்க கூடாது. பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேலாக இட கூடாது. பாகற்காய் விதைகளை தூவுவதற்கு முன்னரே நில தயாரிப்பின்போது நன்கு மக்கிய தொழு உரத்துடன் டிரைக்கோடெர்மா விரிடி, பேசில்லஸ் சப்டிலிஸ் போன்ற உயிரி பூஞ்சான் கொல்லிகளை கலந்து இட வேண்டும்.

பயிர் வளர்ந்து வரும்போது 15 நாட்கள் இடைவெளியில் மேற்குறிப்பிட்ட உயிரி பூஞ்சான் கொல்லிகளை 5 சதவீதம் என்ற அளவில் மண்ணில் இட வேண்டும். இதனால் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து நன்கு வளர்ச்சி அடையும். சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு 3ஜி கரைசலான பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை நீரில் கலந்து அரைத்து தெளிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story