'இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்பது சாத்தியம் இல்லை' கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு
பல்வேறு மொழி, மதங்களை கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்பது சாத்தியம் இல்லை என கே.எஸ்.அழகிரி பேசினார்.
சென்னை,
மணிப்பூர் கலவரத்திற்கு பா.ஜ.க.வே பொறுப்பு என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் அனைத்துக்கட்சி கண்டன கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் தலைமை தாங்கினார்.
கண்டன கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் ஆகியோர் மணிப்பூர் கலவரத்திற்கு பா.ஜ.க.வே காரணம் என கண்டன உரையாற்றினர்.
பொது சிவில் சட்டம்
கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
மணிப்பூரில் மே மாதம் முதல் கலவரம் நடைபெறுகிறது. குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக 3 நாட்கள் கலவரம் நடந்து 2 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டவரை எப்படி காவல்துறை கையை கட்டிக்கொண்டு நின்றதோ, அதே போன்று மணிப்பூரில் இப்போது நடைபெறுகிறது.
பிரதமர் மோடி நேற்றே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். பொது சிவில் சட்டம் வேண்டும் என்று பிரசாரம் தொடங்கி உள்ளார். வட இந்தியாவில், அதை சொல்லி, இந்துக்கள்- முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். பல்வேறு மொழி, மதங்களை கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்பது சாத்தியம் இல்லை. ஒரு மதத்திலேயே ஒற்றுமை இல்லாதபோது எப்படி பொது சிவில் சட்டத்தை கொண்டு வரமுடியும்.
இந்துக்கள் மட்டுமே...
நம் நாட்டிற்கு பொது சிவில் சட்டம் இப்போது தேவையில்லை. வளர்ச்சி அடைந்த பிறகு கொண்டு வரலாம். அப்போதும், அது தேவையா என்பதை நாம் பார்க்க வேண்டும். இவற்றை மக்களிடையே நாம் அழுத்தமாக சொல்லி பிரசாரம் செய்ய வேண்டும். பொது சிவில் சட்டம் வேண்டும் என்பவர்கள் ஒருபக்கமும், பொது சிவில் சட்டம் வேண்டாம் என்பவர்கள் ஒரு பக்கம் பிரிவார்கள். இதை வைத்து அரசியல் செய்ய பா.ஜ.க. பார்க்கிறது.
எனவே, தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் ஆர்.எஸ்.எஸ்.சையும் பா.ஜ.க.வைவும் அப்புறப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. எல்லை மாநிலங்கள் முழுவதும் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என பா.ஜ.க. விரும்புகிறது. இதற்காகவே மணிப்பூர் கலவரத்தை பா.ஜ.க. கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாவட்டத் தலைவர் சிவ ராஜசேகரன், எஸ்.சி. துறை மாநில துணை தலைவர்கள் வின்சென்ட், நிலவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.உமாபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.