சிங்கம்புணரி அருகே பரபரப்பு - துண்டால் கழுத்தை இறுக்கி சிறுமியை கொன்று தாய் தற்கொலை
துண்டால் கழுத்தை இறுக்கி சிறுமியை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிங்கம்புணரி,
துண்டால் கழுத்தை இறுக்கி சிறுமியை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4 வயது சிறுமி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். கொத்தனார். இவருடைய மனைவி சங்கீதா (வயது 24). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய 4 வயது மகள் பிரகன்யா.
இந்த சிறுமி பிறந்ததில் இருந்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவளை அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து வருவது சம்பந்தமாக ஜெயராஜ், சங்கீதாவுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கீதா மனவருத்தம் அடைந்தார்.
தாய்-மகள் பிணம்
ஜெயராஜ், நேற்று முன்தினம் மேலூர் அருகே வேலைக்கு சென்றிருந்தார். இரவில் வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. சந்தேகம் அடைந்த அவர், ஜன்னல் வழியாக பார்த்தார்.
அப்போது, வீட்டின் உள்ளே சங்கீதா தூக்கில் பிணமாக தொங்கினார். அதே அறையில் சிறுமி பிரகன்யா, துண்டால் கழுத்து இறுக்கப்பட்டு பிணமாக கிடந்ததாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் அலறினார்.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்து சிங்கம்புணரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மகளை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு சங்கீதா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது ெதரியவந்தது. இதையடுத்து தாய், மகளின் உடல்களை பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
திருமணமாகி 5 ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்திருப்பதால் இது தொடர்பாக தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.