நிலத்துக்கான இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைப்பதில் தாமதம்


நிலத்துக்கான இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைப்பதில் தாமதம்
x

நிலத்துக்கான இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைப்பதில் தாமதம்

திருப்பூர்

திருப்பூர்

40 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட பி.ஏ.பி. பாசன வாய்க்காலுக்கு நிலம் எடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் சப்-கலெக்டரிடம் முறையிட்டனர்.

பி.ஏ.பி.பாசன வாய்க்கால்

திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி தாசில்தார்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து மனு கொடுத்தனர்.

மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

1980-81-ம் ஆண்டு பி.ஏ.பி. பாசன திட்டம் பல்லடம் விரிவாக்க பகுதியில் பாசன வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட ஆண்டிப்பாளையம், இடுவாய், மங்கலம், சாமளாபுரம், பூமலூர் ஆகிய பகுதிகளில் பி.ஏ.பி.வாய்க்கால் அமைக்கப்பட்டது. விவசாய நிலங்களை வாய்க்கால்கள் அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தி எடுத்துக்கொண்டது. நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு இதுவரையும் வழங்கப்படவில்லை. சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு தொகையை பெற்றனர்.

இழப்பீடு தொகை

மங்கலம், இடுவாய், வேலம்பாளையம், ஆண்டிப்பாளையம் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. நிலத்துக்கு உண்டான இழப்பீடு தொகையை புதிய நிலமெடுப்பு சட்டத்தின்படி கணக்கிட்டு வட்டியுடன் 100 சதவீதம் கூடுதல் ஆறுதல் தொகை வழங்க வேண்டும்.

திருப்பூர் வட்டார வேளாண்மைத்துறை விரிவாக்க இடுபொருள் வழங்கும் கட்டிடம் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அருகில் உள்ளது. சோளம், நிலக்கடலை, உளுந்து மற்றும் இடுபொருட்கள் இங்கு மானியவிலையில் வழங்கப்படுகிறது. இந்த பழைய கட்டிடத்தில் மழைக்காலத்தில் நீர்கசிவு ஏற்பட்டு இடுபொருள் சேதமாகிவருகிறது. இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடத்தை உடனடியாக புனரமைக்க வேண்டும்.

பிரதமரின் திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணையாக ரூ.6 ஆயிரம் வங்கி மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மங்கலம், இடுவாய், முதலிபாளையம், பொங்குபாளையம் கிராமங்களில் உள்ள ஏராளமான விவசாயிகளுக்கு நடப்பாண்டில் இரண்டு தவணை வழங்கப்பட்டும், மூன்றாவது தவணை தொகை வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக கிடைக்க வழி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

குட்டையில் கழிவுகள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு செயலாளர் அப்புசாமி பேசியதாவது:-

ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி முட்டியங்கிணறு பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவு உள்ள புறம்போக்கு குட்டையில் இறைச்சிக்கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டி குட்டை மாசடைந்து வருகிறது. இந்த குட்டையை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த குட்டை அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு நீர் நிரப்புவதற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு சூரியமின்தகடு மற்றும் மின் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.எனவே கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

பொங்குபாளையம் ஊராட்சி பகுதியில் கால்நடை வளர்ப்பில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள பெருமாநல்லூர், பூலுவப்பட்டி, 15 வேலம்பாளையம், அவினாசி பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. பொங்குபாளையம் ஊராட்சி பகுதியில் கால்நடை மருத்துவமனை புதிதாக அமைக்க வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சி காலம்பாளையத்தில் ரேஷன் கடை கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. புதிய ரேஷன் கடை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story