இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனரை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் களக்காட்டில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதையடுத்து அதற்கு போட்டியாக அவருக்கு ஆதரவு தெரிவித்து சர்வ கட்சி கூட்டமைப்பு என்ற பெயரில் மற்றொரு சுவரொட்டியும் ஒட்டப்பட்டது. இதனால் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் களக்காட்டில் வனத்துறை துணை இயக்குனரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய துணை செயலாளர் பாலன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர்கள் முத்துவேல், நம்பிராஜன், பாண்டி, நாங்குநேரி ஒன்றிய செயலாளர் ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.