இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
தேனியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தியதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று சாலை மறியல் நடைபெற்றது.
அதன்படி, தேனியில் கட்சியின் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் பரமேஸ்வரன், பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக அவர்கள் தேனி பழைய பஸ் நிலைய பகுதியில் இருந்து போக்குவரத்து சிக்னல் வரை ஊர்வலமாக வந்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.