தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம்சமூக செயற்பாட்டாளர்கள் புகார் மனு
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம்சமூக செயற்பாட்டாளர்கள் புகார் மனு கொடுத்தனர்.
சமூக செயற்பாட்டாளர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சுப.உதயகுமரன், மா.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக சட்டத்துக்கு உட்பட்டு சமூக பணிகளில் ஈடுபடுபவர்கள் சமூகவிரோதிகளால் தாக்கப்படுகின்றனர். போலீசார் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காத நிலையும் அதிகரித்து வருகிறது. உடன்குடியில் சமூக செயற்பாட்டாளராக பொதுமக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் குணசீலன் பல்வேறு பிரச்சினைகளில் போராடி வருகிறார். இந்தநிலையில் குணசீலனை ஒருவர் கார் ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், சமூக சமூக செயற்பாட்டாளர் குணசீலனுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.