சமுதாய வளைகாப்பு விழா


சமுதாய வளைகாப்பு விழா
x

செம்பனார்கோவிலில் 60 கர்ப்பிணிகளுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறையின் சார்பில் 60 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் ரத்த சோகை விழிப்புணர்வு முகாம் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனருமான அமுதவள்ளி கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்தார்.

தாய்ப்பால்

அப்போது அவர் பேசுகையில், கர்ப்பிணிகள் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்ய வேண்டும். அங்கு வழங்கப்படும் சத்து மாவை வாங்கி சாப்பிட வேண்டும். நீங்கள் குழந்தை பெற்ற பிறகு 6 மாதம் வரை அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள்) தமிமுன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, விஜயலட்சுமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன், அப்துல்மாலிக், நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கர்ப்பிணிகளுக்கு மங்கள பொருட்கள், புடவை, தாம்பூலம் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி நடந்தது.


Next Story