கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு


கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
x

ராசிபுரத்தில் கர்ப்பிணிகளுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பில் கலெக்டர், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

நாமக்கல்

ராசிபுரம்

சமுதாய வளைகாப்பு

தமிழ்நாடு அரசு கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், தாய்ப்பாலின் அவசியம் மற்றும் நன்மைகள், இனை உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

அதன்படி ராசிபுரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 120 கர்ப்பிணிகளுக்கு பேரிச்சம் பழங்கள், விட்டமின்-சி சத்துள்ள தேன் நெல்லி, புரதச்சத்திற்காக கடலை மிட்டாய், கர்ப்பிணிகளுக்கு வளையல், பூ, மஞ்சள், கர்ப்பகால பராமரிப்பு புத்தகம் மற்றும் 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது.

மருத்துவரின் ஆலோசனை

கலெக்டர் ஸ்ரேயா சிங் கர்ப்பிணிகளுக்கு வலையல்களை அணிவித்தார். இதில் கே.ஆர்.என்.ராகேஷ்குமார் எம்.பி. பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அரசு பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனைகளையும், மருத்துவ பரிசோதனைகளையும் கட்டாயம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது:-

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவதன் மூலம் அவர்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படுகிறது. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இனிய ஒலி கேட்பதற்காக வளையல் அணிவிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் தங்கள் உடல் நலன் மீது அதிக அக்கறை கொண்டு ஆரோக்கியமான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ராசிபுரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.பி.ஆர்.சுந்தரம், ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் கே.பி. ஜெகநாதன், ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சவிதா மற்றும் விஜயலட்சுமி, கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story