500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
தர்மபுரியில் 500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தர்மபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் தர்மபுரி வட்டாரத்தை சேர்ந்த 500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா தர்மபுரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் ஜான்சி ராணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கினர்.
தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது கர்ப்பிணிகளுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து, கைகளுக்கு வளையல் அணிவித்தார். இந்த விழாவில் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது. மேலும் கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள், குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு எடுத்து கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல், மருத்துவ பரிசோதனைகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.