5 வகையான உணவுகள் வழங்கி 285 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு -அமைச்சர்கள் பங்கேற்பு


5 வகையான உணவுகள் வழங்கி 285 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு -அமைச்சர்கள் பங்கேற்பு
x

285 கர்ப்பிணிகளுக்கு நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு விழாவில் 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டன. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன் பங்கேற்றனர்.

சென்னை,

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு 285 கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து சீர்வரிசைகளை வழங்கினர்.

விழாவில் தாய் கருவிலேயே குழந்தை ஆரோக்கியமாக வளரவும், கர்ப்பம் என தெரிந்தவுடன் பதிவு செய்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், தகுந்த பரிசோதனைகள் செய்து கொள்வதன் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்து கூறப்பட்டது.

மேலும் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு பெற்று தினமும் உண்ணவேண்டும். கருவிலேயே அறிவுவளர்ச்சி 25 சதவீதம் முடிவடைவதால் தாய் மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருத்தல், வளையல் அணிதல், இவற்றோடு குழந்தையிடம் பேசுதல் வேண்டும் என்பன போன்ற தகவல்களும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டது.

5 வகையான உணவுகள்

பின்னர் கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, சந்தனம், பூ, குங்குமம் வைத்து வளையல் அணிவித்து பன்னீர் தெளிக்கப்பட்டது. அதனோடு புடவை, ரவிக்கை, வளையல், பூ, பழம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, கண்ணாடி, தட்டு, கையேடு அடங்கிய சீர்வரிசைத்தட்டும் கர்ப்பிணிகளுக்கு வழங்கினார்கள்.

இதுதவிர சர்க்கரை பொங்கல், புளி, தயிர், தேங்காய், எலுமிச்சை சாதம் ஆகிய 5 வகை உணவுகளுடன் வடை, பாயாசமும் வழங்கி சமுதாய வளைகாப்பு விழா நடந்து முடிந்தது. இதில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தாயகம் கவி எம்.எல்.ஏ., பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை இயக்குனர் வெ.அமுதவள்ளி, மண்டல குழு தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை இணை இயக்குனர் வி.ஆர்.ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story