80 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
80 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
காங்கயம்
காங்கயத்தில் 80 கர்ப்பிணிகளுக்கு நேற்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார்.
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
காங்கயம், பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 80 கர்ப்பிணிகளுக்கு நேற்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்க இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினார். விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு 80 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
சீர்வரிசை
திருப்பூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 14 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சமுதாய வளைகாப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காங்கயம் வட்டாரத்தில் 80 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையாக தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் ஐந்து வகை உணவுடன் மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் அரசு மருத்துவமனையில் பயன் பெறும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம் சுகாதார துறையின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1000 ரொக்கமும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு
கர்ப்ப காலம் முன்பின் பராமரிப்பு குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள் குழந்தை வளர்ப்பு தடுப்பூசிகள் போன்ற பல தகவல்கள் குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் மரகதம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன், குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் எஸ்.தீபா, காங்கயம் தி.மு.க நகரச் செயலாளர் வசந்தம் சேமலையப்பன், துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.