250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
மயிலாடுதுறையில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இதில் கலெக்டர் லலிதா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இதில் கலெக்டர் லலிதா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
சமுதாய வளைகாப்பு
மயிலாடுதுறையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் கலெக்டர் லலிதா கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து வாழ்த்தினார்.அப்போது அவர் பேசியதாவது:-தாய்மை என்பது வரம். நம்முடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் அழகான, சத்தான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதே. இந்த நேரத்தில் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்படுகிறது.
பெண்கள் சாதிக்க வேண்டும்
நீங்கள் சத்தான உணவு உண்பதற்கு பாரம்பரிய உணவு கண்காட்சி இங்கு வைக்கப்பட்டுள்ளது. அரசின் மூலம் கிடைக்க கூடிய நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதிக்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள் மூலம் சொல்லப்படும் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.சுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். பிரசவ நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
ஊட்டச்சத்து கண்காட்சி
முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் துறையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய ஊட்டச் சத்து மாத விழா கண்காட்சி, பாரம்பரிய உணவு திருவிழா ஆகியவற்றை கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட்டனர்.விழாவில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், நகர்மன்ற தலைவர்கள் செல்வராஜ் (மயிலாடுதுறை), துர்கா பரமேஸ்வரி (சீர்காழி), ஒன்றிய குழு தலைவர்கள் காமாட்சி மூர்த்தி (மயிலாடுதுறை), மகேந்திரன் (குத்தாலம்), நந்தினி ஸ்ரீதர் (செம்பனார்கோவில்), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தமிமுன்னிசா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.