பாப்பாக்கோவில் பஸ்நிறுத்த கட்டிடங்களில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதி
பாப்பாக்கோவில் பஸ்நிறுத்த கட்டிடங்களில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதி
நாகை அருகே பாப்பாக்கோவில் பஸ் நிறுத்த கட்டிடத்தில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். எனவே உடனடியாக இருக்கைகள் அமைத்து தர பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பஸ் நிறுத்த கட்டிடங்கள்
நாகை அருகே பாப்பாக்கோவிலில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதனை நாள்தோறும் மாணவ-மாணவிகள், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வேளாங்கண்ணி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி மார்க்கமாக செல்லும் பயணிகள் நிற்கும் இடத்தில் 2 பஸ் நிறுத்த கட்டிடங்கள் உள்ளன.
இந்த கட்டிடங்களில் உள்ள இருக்கைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. தற்ேபாது இருக்கைகள் இல்லாமல் உள்ளது. இதனால் மாணவ - மாணவிகள், பயணிகள் நீண்ட நேரம் வெளியே நின்று கொண்டு பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாப்பாக்கோவில் பஸ் நிறுத்த கட்டிடங்களில் உடனடியாக இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
இதுகுறித்து கலைத்தமிழன் கூறுகையில், பாப்பாக்கோவில் பஸ் நிறுத்த கட்டிடங்களில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் ரோட்டின் ஓரத்தில் நிற்கின்றனர். குறிப்பாக அருகில் தனியார் கல்லூரிகள் உள்ளதால் மாலை நேரத்தில், கூட்டம் அதிகமாக இருக்கும். அப்போது அமர இடம் இல்லாமல் பயணிகள் சாலை ஓரத்தில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் வேகத்தடை இல்லை. சில நேரங்களில் வேகமாக செல்லும் வாகனங்கள், சாலை ஓரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது மோதி விபத்து ஏற்படும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.
இருக்கைகள் அமைத்து தர வேண்டும்
எனவே பொதுமக்களின் நலன் கருதி பாப்பாக்கோவில் பஸ் நிறுத்த கட்டிடங்களில் இருக்கைகளை அமைத்து தர வேண்டும். இருக்கைகளை சேதப்படுத்தும் மர்ம நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலக்குறிச்சியை சேர்ந்த ஆரியமாலா கூறுகையில், தினந்தோறும் பாப்பாக்கோவில் பஸ் நிறுத்தத்துக்கு வந்து செல்கிறேன். இருக்கை இல்லாததால் வயதான காலத்தில் என்னால் உட்கார கூட முடியவில்லை. எவ்வளவு நேரம் நின்று கொண்டே இருக்க முடியும். வேறு வழி இல்லாமல் ரோட்டில் உட்கார்ந்து வருகிறேன். என்னைப் போன்ற முதியவர்களும், கர்ப்பிணிப்பெண்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பாப்பாக்கோவில் பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.