மின்சாரம் இல்லாமல் பயணிகள் அவதி
நெல்லை- செங்கோட்டை ரெயிலில் மின்சாரம் இல்லாமல் பயணிகள் சிரமப்பட்டனர்.
நெல்லை சந்திப்பில் இருந்து நேற்று மாலை 6.15 மணிக்கு செங்கோட்டை செல்லும் பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் 5-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் மின்சாரம் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.
இந்த பெட்டிகளில் ரெயில் செல்லும்போது மட்டுமே மின்சாரம் இருந்தது. ரெயில், ரெயில் நிலையத்தில் நின்றதும் மின்சாரம் தடைபட்டது. அம்பை ரெயில்நிலையத்தில், செங்கோட்டையில் இருந்து நெல்லை வந்த ரெயிலுக்காக கிராசிங் போடப்பட்டது. அப்போது ரெயிலில் மின்சாரம் இல்லாமல் அதிக சிரமப்பட்டனர்.
இதேபோல் ரவணசமுத்திரம் ரெயில் நிலையத்திலும், கீழக்கடையம் ரெயில் நிலையத்தில் அதிக நேரம் ரெயில் நின்றது. அப்போது மின்சாரம் இல்லாமல் ஒரே இருட்டாக ரெயில் பெட்டிகள் இருந்தது. இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். ரெயில்வே நிர்வாகம் ரெயிலை இயக்குவதற்கு முன்பு அனைத்து பணிகளையும் சரிசெய்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.