கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிவாரணம் பெறலாம்


கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிவாரணம் பெறலாம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தாட்கோ மூலம் நிவாரணம் பெறலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தாட்கோ மூலம் நிவாரணம் பெறலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கால் பாதிப்பு

கொரோனா பரவல் கால ஊரடங்கு குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களை பாதிப்புக்குள்ளாக்கியது. சில்லறை விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நேரங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை பரிந்துரைக்க ஒரு வல்லுனர் குழுவை அமைத்தது. அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

அதன்பேரில் தொழில் முனைவோருக்கான கொரோனா உதவி மற்றும் நிவாரணம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை அரசு வடிவமைத்து அறிவித்துள்ளது. அதன்படி வணிகரீதியாக பாதிக்கப்பட்டுள்ள தனி நபர்கள், தனி உரிமை அல்லது பங்குதாரர் அலகுகள், தங்கள் பழைய நிறுவனத்தை மறு உருவாக்கம் செய்ய அல்லது புதிய நிறுவனத்தை தொடங்குவதற்கான உதவியை பெறலாம்.

உதவி பெறலாம்

இத்திட்டத்திற்கான திட்டச்செலவு அதிகபட்சமாக ரூ.5 கோடியாக இருக்கலாம். எந்திர தளவாடங்களுக்கான முதலீட்டில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்த உதவியைபெற 21 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் மட்டும் இச்சலுகை பெறமுடியும்.

மற்றொரு திட்டத்தில் மாநிலத்தின் எந்த பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டு நவீன மயமாக்கலை மேற்கொள்ள கொள்முதல் செய்யப்படும் எந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற 23.3.20-ந் தேதி அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவிற்கு பின்னர் தங்களது நிறுவனத்தை நவீன மயமாக்கிய அல்லது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்திய நிறுவனங்கள் மட்டுமே தகுதிபெறும். இத்திட்டம் ஓராண்டு காலம் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் தகுதி உடைய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மானியம் பெற்று பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டை தேவராஜ் நகரில் ஐ.வி.பி.எம் எதிரில் உள்ள மாவட்ட தொழில் மைய மேலாளரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story