மாநகராட்சி அதிகாரிகள் ரூ.22 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்-நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
நிலத்தை அளந்து கொடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் ரூ.22 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (வயது 69). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் எல்கையை அளந்து கல் நட்ட வேண்டும் என்று ரூ.800 செலுத்தி மேலப்பாளையம் மாநகராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உதவி சார்ஆய்வாளர் ஆகியோரிடம் கடந்த 2020-ம் ஆண்டு விண்ணப்பித்தார். ஆனால் நிலத்தை அளந்து கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முத்துப்பாண்டியன் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை நீதிபதி கிளாடஸ் டோன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் விசாரணை நடத்தி, நிலத்தை அளந்து ெகாடுக்காமலும், என்ன காரணத்துக்காக நிலத்தை அளந்து காட்டவில்லை என்று பதில் தெரிவிக்காததாலும், மேலப்பாளையம் மாநகராட்சி உதவி ஆணையாளர், உதவி சார் ஆய்வாளர் ஆகியோர் முத்துப்பாண்டியனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.20 ஆயிரமும், வழக்குச்செலவு ரூ.2 ஆயிரமும் என மொத்தம் ரூ.22 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.