பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்


பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மழையால் பருத்தி அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

மழையால் பருத்தி அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்்கை விடுத்துள்ளனர்.

பருத்தி சாகுபடி

பணப்பயிர்களில் முக்கிய இடம் பிடிக்கும் பருத்தி இந்திய பொருளாதாரம், தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. ஏற்றுமதி துறையில் முக்கிய வர்த்தகம் கொடுக்கும் ஜவுளி துறையின் மூலப்பொருளாக பருத்தி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. நூல் விலை உயர்வு, குறைந்த அளவு தண்ணீர், அதிக திறன் கொண்ட புதியரக பருத்தி ரகங்கள் உள்ளிட்ட காரணங்களால் தற்போது பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர், திருப்புகலூர், வவ்வாலடி, அம்பல், போலகம், பொறக்குடி, இடையாத்தங்குடி, மருங்கூர், திருப்பயத்தங்குடி, வாழ்குடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது.

விவசாயிகள் கவலை

இந்த ஆண்டு மழைக்கு முன்பாக நடவு செய்யப்பட்டது. செடியின் இயல்பான வளர்ச்சி இல்லாத நிலையில் பூ பிடிக்கும் தருணத்தில் மழை பெய்தது. இதனால் பெரும்பாலான பூக்கள் உதிர்ந்து பிஞ்சுகள் போதிய அளவில் பிடிக்கவில்லை. கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து நல்ல விலை கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு பருத்தி ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்துக்கும் மேல் விலை கிடைத்தது. தற்போது விலை பாதியாக குறைந்து கிடைக்கிறது. கடந்த ஆண்டு பருத்தி நன்றாக விளைந்ததோடு மட்டுமில்லாமல் அதிக விலைக்கு விற்பனையானது. இந்த ஆண்டு பருத்தி ஓரளவுக்கு விளைந்த போதும் உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

இதுகுறித்து திருமருகல் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

கடந்த ஆண்டு பருத்தி நல்ல மகசூல் இருந்தபோதும், நல்ல விலையும் கிடைத்தது. ஒரு கிலோ பருத்தி ரூ.60 முதல் ரூ.110 வரை கிடைத்தது. இந்த ஆண்டு பருத்தியை ஆரம்பத்தில் அறுவடை செய்து கமிஷன் கடைக்கு கொண்டு சென்றபோது ரூ.50-க்கு தான் வாங்குகின்றனர்.

எனவே அரசு பருத்தி விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். சில நாட்களுக்கு முன் பெய்த கோடை மழையால் பருத்தி அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. .எனவே அரசு உரிய கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.


Next Story