வெள்ளப்பெருக்கு, கச்சா எண்ணெய் கழிவு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குக - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"உரலுக்கு ஒரு பக்கம் அடினா மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி" என்ற பழமொழிக்கேற்ப எண்ணூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மீனவ மக்கள் வெள்ளப் பெருக்கு மற்றும் கச்சா எண்ணெய் கழிவு என இரட்டிப்பு பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
அண்மையில் பெய்த கனமழை காரணமாக எண்ணூர், மணலி, திருவெற்றியூர் போன்ற பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், அப்பகுதி மக்களின் உடைமைகள் பெருத்த சேதத்திற்கு உள்ளான நிலையில், வெள்ளம் வடிந்த பிறகு, வெள்ளநீருடன் கலந்து வந்த ஆயில் கழிவு ஆயிரக்கணக்கான வீடுகளின் சுவர்களில் படிந்திருந்தது தெரிய வந்தது.
சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்த ஆயில் கழிவு வெள்ள நீருடன் கலந்து கடல் நீரை மாசுப்படுத்தியதுடன், மீனவர்களின் படகுகள், வலைகள், என்ஜின்கள் ஆகியவை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
இதனுடைய தாக்கம் 2017 ஆம் ஆண்டு இரண்டு கப்பல்கள் மோதியதால் 251 டன் ஆயில் கொட்டியதை விட மிக அதிகம் என்றும், இதன் காரணமாக தரையில் நிற்க வைக்கப்பட்டிருந்த படகுகளை எடுக்கவே முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும், சிலர் படகுகளை எடுத்து மீன்பிடித் தொழிலை மேற்கொண்ட நிலையில், அந்த மீன்களை வாங்க யாரும் முன்வரவில்லை என்றும், இப்பகுதிகளில் வசிக்கும் பலர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாதிப்பு கொசஸ்தலையாற்றிலிருந்து காசிமேடு துறைமுகம் வரை பரவி உள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுக்கவில்லை என்றும், தீவிரமான மற்றும் உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இந்தக் கழிவு மேலும் தெற்குப் பக்கமாக பரவக்கூடும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், எண்ணூர், மணலி, திருவொற்றியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் கனமழையினால் பெருத்த இழப்பை சந்தித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் கழிவு என்பது அவர்களுடைய வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதிலிருந்து அப்பகுதி மக்கள் மீண்டு வர பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டு பாதிப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வரையில், அவர்களுக்கு வெள்ள நிவாரணமாக குறைந்தபட்சம் 15,000 ரூபாய் தருவதோடு மட்டுமல்லாமல், உடனடியாக மீன்பிடித் தொழிலை அவர்கள் மேற்கொள்ள முடியாத நிலையில், அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வண்ணம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட நீரினை அளிக்க வேண்டுமென்றும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதற்கான இழப்பீட்டினை ஆயில் கழிவு கலப்புக்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டுமென்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.