தொழில் பூங்காவிற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு புதிய சட்டத்தின்படி இழப்பீடு
தொழில் பூங்காவிற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு புதிய சட்டத்தின்படி இழப்பீடு ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் தொழில் பூங்கா அமைக்க கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் 2014-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட நிலங்களின் சந்தை மதிப்பின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.சவுந்தர் ஆகியோர் "அரசின் பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில்தான் மத்திய அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. எனவே, அந்த சட்டத்தின்படி நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும். இதுதொடர்பான சட்ட விதிகளை அரசு அமல்படுத்தினால் மட்டும் போதாது. கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். எனவே, ஸ்ரீபெரும்புதூரில் தொழில் பூங்கா அமைக்க கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, புதிய சட்டத்தின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை மீண்டும் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.