தர்மபுரியில் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்


தர்மபுரியில் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

விளையாட்டு போட்டி

தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 63-வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் நடைபெறுகிறது. பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரியில் கைப்பந்து, எறிபந்து, கோகோ ஆகிய போட்டிகளும், நல்லனூர் ஜெயம் பொறியியல் கல்லூரியில் கால்பந்து, கூடைப்பந்து, ஹேண்ட் பால் போட்டிகளும், தர்மபுரி டான் மெட்ரிக் பள்ளியில் கபடி, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போட்டிகளும் நடக்கிறது.

தர்மபுரி விஜய் மில்லினியம் பள்ளியில் லான் டென்னிஸ் போட்டியும், தர்மபுரி கமலம் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆக்கி போட்டியும் நடக்கிறது. 6 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 11 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.

தொடக்க விழா

மாநில அளவிலானகுடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா சப்தகிரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். டாக்டர் செந்தில்குமார் எம்.பி., வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் அனிதா, முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் குணசேகரன், சப்தகிரி கல்லூரி நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் வரவேற்றார்.

விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் அனைத்து மாவட்ட மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வண்ண பலூன்களை அமைச்சர் பறக்கவிட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

விளையாட்டு மைதானங்கள்

விழாவில் அமைச்சர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் விளையாட்டுத்துறை தற்போது உயிர் பெற்றுள்ளது. இந்த துறையின் அமைச்சர், எங்கள் இயக்கத்தின் இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறையை தேசிய அளவில் உயர்த்துவார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

விழாவில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், ராஜகோபால், மான்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நல்லாம்பட்டி அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.


Next Story