வேடசந்தூரில் வாடகை வாகன டிரைவர்கள் போலீசில் புகார்
வேடசந்தூரில் வாடகை வாகன டிரைவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
வேடசந்தூர் தந்தை பெரியார் சுற்றுலா வேன், கார் ஓட்டுனர்கள் சங்க தலைவர் அன்வர் அலி, ஆத்துமேடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்க பொருளாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமையில் வாடகை வாகன டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் "வேடசந்தூரில் சொந்த பதிவெண் கொண்ட கார், வேன் வைத்திருப்பவர்கள் குறைந்த வாடகைக்கு தங்களது வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் வாடகை டிரைவர்களான எங்களுக்கு தொழில் பாதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள் மூலம் சொற்ப வருமானத்தை வைத்து தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே வாடகைக்கு ஆட்களை ஏற்றி செல்லும் சொந்த பதிவெண் கொண்ட வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.