அங்கன்வாடியில் 4 வயது சிறுவனுக்கு சூடு கலெக்டர் அலுவலகத்தில் தாய் புகார்
தர்மபுரி:
அங்கன்வாடியில் 4 வயது சிறுவனுக்கு சூடு போடப்பட்டதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூடு வைத்த காயம்
தர்மபுரி மாவட்டம் ராமியம்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் கீர்த்திகா. இவர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ராமியம்பட்டியில் உள்ள பாலர் பள்ளியில் எனது 4 வயது மகனை சேர்த்து உள்ளேன். எனது மகனின் 2 கால்களின் பின்புறமும் சூடு வைத்த காயம் இருந்தது. இதுதொடர்பாக அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளரிடம் கேட்டபோது சரியாக பதில் கூறவில்லை.
எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும். இனிமேல் வேறு எந்த குழந்தைக்கும் இதுபோல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
உரிய நடவடிக்கை
இந்த புகார் மனு குறித்து மாவட்ட அங்கன்வாடி திட்ட அலுவலர் ஜான்சி ராணி கூறுகையில், அங்கன்வாடியில் சிறுவனுக்கு சூடு வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் அளித்துள்ள புகார் குறித்து கலெக்டர் உத்தரவுப்படி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.