11 நாய்களை கொன்றதாக வனக்காவலர் மீது புகார்
கோழி இறைச்சியில் விஷம் கலந்து, 11 நாய்களை கொன்றதாக வனக்காவலர் மீது புகார் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "கடமலை-மயிலை ஒன்றியம் மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட கோரையூத்து கிராமத்தில் விவசாயிகள் வளர்த்து வந்த 11 நாய்களை கோழிக்கறியில் விஷம் கலந்து வைத்து வனக்காவலர் ஒருவர் கொன்றுள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த விவசாயி தெரிவித்த தகவலின் பேரில், நாய்களை வளர்த்த விவசாயிகள் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
வனத்துறை அதிகாரி ஒருவர், மக்களிடம் பேசி புகாரை வாபஸ் பெற வைத்துள்ளார். போலீசாரும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். எனவே, மாவட்ட கலெக்டர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, நாய்களை கொன்ற வனக்காவலர் மீதும், அதற்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீதும் மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.