சீமான் மீதான புகார் விவகாரம்: நடிகை விஜயலட்சுமிக்கு 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை
சீமான் மீது அளித்த புகாரின் பேரில் நடிகை விஜயலட்சுமிக்கு சுமார் 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை சென்னை ஆஸ்பத்திரியில் நடந்தது.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது கொடுத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படி புகார் கொடுத்தார்.
இதுகுறித்து கடந்த மாதம் ஆகஸ்டு 31-ந்தேதி ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். இதில் பல விவரங்களை போலீசார் பெற்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கடந்த 1-ந்தேதி திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டு வாக்கு மூலம் அளித்தார். வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், புகைப்படங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சீமான் மீது புகார் அளித்த விஜயலட்சுமி, கடந்த 2011-ம் ஆண்டு தன்னிடம் பணம், நகையை பறித்து மோசடி செய்ததாகவும், மேலும் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக நடந்த போலீஸ் விசாரணையில் அவர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்து உள்ளார். இதன் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகார் மீது போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர்.
2 மணி நேரம் பரிசோதனை
அதன்படி, நடிகை விஜயலட்சுமிக்கு கன்னித்தன்மை பரிசோதணை நடத்தி மருத்துவ ரீதியான ஆதாரங்களை உறுதிபடுத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். நேற்று காலை 10 மணியளவில் நடிகை விஜயலட்சுமியை திருக்கழுகுன்றத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைந்து வந்தனர். தொடர்ந்து நடிகை விஜயலட்சுமியை கர்ப்பிணிகள் பரிசோதனை செய்யும் வார்டுக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 2 மணி நேரம் 4 பேர் கொண்ட மகப்பேறு டாக்டர்கள் மூலம் நடிகை விஜயலட்சுமிக்கு கருப்பையில் 'அல்ட்ராசவுண்ட்' என்ற மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை முடிந்து மதியம் 12.30 மணியளவில் வார்டிலிருந்து வெளியே வந்தார்.
தொடர்ந்து, விஜயலட்சுமியிடம் பேட்டி எடுக்க காத்திருந்த நிருபர்களுக்கு பேட்டி அளிக்காமல் போலீசார் அவரை பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனை அறிக்கையை தொடர்ந்து சீமான் மீதான விஜயலட்சுமி புகார் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், இதற்கு முன்பாக நடிகை விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்தது எந்த டாக்டர் என்பதை கண்டறிந்த பிறகு தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.