வீட்டின் உரிமையாளர் மீது புகார்
வங்கி அதிகாரிகள் வைத்த சீல் அகற்றிய வீட்டின் உரிமையாளர் மீது புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி
காட்பாடி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கவுசல்யா. கணவன்-மனைவி இருவரும் வேலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.
அவர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக வங்கி சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதையடுத்து சுரேஷ் வீட்டிற்கு சீல் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி வங்கி தலைமை மேலாளர் கருணாகரன் வேலன் தலைமையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுரேஷ் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வீட்டிற்கு வைத்த சீலை அகற்றிவிட்டு சுரேஷ் மற்றும் கவுசல்யா ஆகியோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றிய சுரேஷ், கவுசல்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கருணாகரன் வேலன் காட்பாடி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.