வீட்டை காலி செய்து தர பணம் வாங்கியதாக போலீஸ்காரர் மீது புகார்


வீட்டை காலி செய்து தர பணம் வாங்கியதாக போலீஸ்காரர் மீது புகார்
x

வீட்டில் வாடகைக்கு இருந்தவரை காலி செய்து தர போலீஸ்காரர் ஒருவர் பணம் வாங்கியதாக போலீஸ் கமிஷனரிடம் மூதாட்டி புகார் மனு அளித்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடந்த முகாமில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன் (மேற்கு), சரவணகுமார் (கிழக்கு), அனிதா (தலைமையிடம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது வண்ணார்பேட்டையை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கமிஷனரிடம் வழங்கிய மனுவில், 'எனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர் வாடகையை தராமலும், வீட்டை காலி செய்யாமலும் இருந்தார். அந்த வீட்டை காலி செய்து தருவதாக கூறி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் என்னிடம் ரூ.2 ஆயிரம் வாங்கி ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

அதேபோல் டவுன் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது திருடு போன காரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறி மனு வழங்கினார். இதேபோன்று பலரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினர். உதவி போலீஸ் கமிஷனர்கள் பிரதீப் (பாளையங்கோட்டை), சதீஷ்குமார் (மேலப்பாளையம்), ராஜேஸ்வரன் (சந்திப்பு), விஜயக்குமார் (டவுன்) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கி, மனுக்களை பெற்றார். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார்.


Next Story