கார்ப்பரேட் நிறுவன பொருட்களை தடுத்து நிறுத்திய வியாபாரிகள் மீது புகார்
குடியாத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்திய வியாபாரிகள் மீது போலீசில்புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இரு தரப்பினருடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
குடியாத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்திய வியாபாரிகள் மீது போலீசில்புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இரு தரப்பினருடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தடுத்து நிறுத்தினர்
கடந்த சில நாட்களுக்கு முன் குடியாத்தம் நகரில் உள்ள கடைகளுக்கு வேலூரில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பில் பொருட்களை வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யும் வினியோகிஸ்தர்கள் தரும் விலையை விட குறைவான விலையில் சப்ளை செய்தனர்.
இந்த தகவல் அறிந்த குடியாத்தம் பகுதி நுகர்பொருள் மொத்த வினியோகிஸ்தர்கள் மற்றும் வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை குறைந்த விலையில் பொருட்களை சப்ளை செய்வதை நிறுத்தினர். இதனால் பொருட்களை சப்ளை செய்யாமல் திரும்பி சென்றனர்.
போலீசில் புகார்
பொருட்களை சப்ளை செய்யவிடாமல் தடுத்ததாக ஜியோ மார்ட் நிறுவனம் சார்பில் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் நுகர் பொருள் வினியோகிஸ்தர்கள் மற்றும் வியாபாரிகளை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று காலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகிஸ்தர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் பி.எம்.கணேஷ்ராம் தலைமையில், குடியாத்தம் தலைவர் மோகன்பாபு, தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் என்.இ.கிருஷ்ணன், வியாபாரிகள் சங்க அவை தலைவர் எஸ்.நடராஜன், நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் டி.ராஜேந்திரன், துணைத் தலைவர் எஸ்.ஜி.எம்.விநாயகம் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
பேச்சுவார்த்தை
அவர்களில் முக்கிய நிர்வாகிகளை அழைத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் புகார் அளித்த ஜியோ மார்ட் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நுகர் பொருள் வினியோகிஸ்தர்கள் மற்றும் வியாபாரிகள், ஜியோ மார்ட்டால் ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு சப்ளை செய்வதை தடை செய்யவில்லை. அந்தந்த ஊரில் வினியோகிஸ்தர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் விற்பனை செய்ய உள்ள பொருட்களை, இவர்கள் சில்லறை வியாபாரிகளுக்கும், மளிகை கடைகளுக்கும் சப்ளை செய்கின்றனர். அதனால் நுகர் பொருள் வினியோகிஸ்தர்கள் மற்றும் அவர்களிடம் வாங்கி விற்கும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். அதற்கு ஜியோ மார்ட் நிறுவனத்தினர் ஆன்லைன் மற்றும் கடைகளுக்கு விற்பனை செய்ய உத்தரவு பெறப்பட்டுள்ளதாக கூறினர்.
உத்தரவு பெற வேண்டும்
அதற்கு குறிப்பிட்ட ஊர்களில் பொருட்களை விற்பனை செய்யலாம் என அந்த நிறுவனத்தின் சார்பில் கடிதம் பெற்றிருந்தால் தாராளமாக விற்பனை செய்யலாம், ஊர்கள் குறிப்பிடாமல் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஜியோ மார்ட் பொருட்களை விற்பனை செய்ய அந்தந்த நிறுவனத்திலிருந்து ஊர்களை குறிப்பிட்டு உத்தரவு பெறப்பட்டு வருமாறும், அதன் பின்னர் அந்தந்த ஊர்களில் விற்பனை செய்யலாம் என போலீசார் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இதனால் இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.