புகார் பெட்டி
புகார் பெட்டி
சுகாதார சீர்கேடு
திட்டுவிளை அண்ணாநகர் பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும், அவற்றுக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரிப்பதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சமியன்பிள்ளை, காயிதேமில்லத் நகர்.
குரங்குகள் அட்டகாசம்
காட்டுப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை அங்குள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடி வருகின்றன. விரட்ட வருபவர்களையும் கடிக்க வருவதால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்குமார், காட்டுப்புதூர்.
ஆபத்தான மரம்
இரணியலில் இருந்து ராஜாக்கமங்கலம் செல்லும் சாலையில் மடவிளாகம் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் பட்டுப்போன மரம் ஒன்று நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் சாலையில் முறிந்து விழும் நிலையில் அந்த மரம் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த மரத்தை வெட்டி அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.தேவதாஸ், ராமநாதபுரம்.
வாகன ஓட்டிகள் அவதி
விவேகானந்தபுரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து ஏழுசாட்டு பத்து கிராமத்துக்கு செல்லும் பிரிவுச்சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.
ஓடையை தூர்வார வேண்டும்
வடக்கு சூரங்குடி சின்னகுளம் பகுதியில் சாலையோரத்தில் கால்வாய் உள்ளது. ஆனந்தனார் கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் இந்த கால்வாய் வழியாக அந்த பகுதியில் உள்ள குளத்துக்கு செல்கிறது. தற்போது, கால்வாயில் அந்த பகுதிைய சேர்ந்த சிலர் தென்னை ஓலைகள், குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், கால்வாயில் தண்ணீர் வடிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பைகளால் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, குப்பைகளை அகற்றி ஓடையை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாம்சன், வடக்கு சூரங்குடி.
நடவடிக்கை தேவை
திங்கள்சந்தை பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தையின் நுழைவுவாயில் அருகில் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக அந்த ஓடை சேதமடைந்து அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பாய்ந்து வருகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை தூர்வாரி சீரமைத்து கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஜித், திங்கள்சந்தை.
மின்கம்பம் மாற்றப்படுமா?
மார்த்தாண்டம் கோழிப்போர்விளையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பிரதான வாசலின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அலுவலகத்துக்கு வாகனங்களில் வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி சாலையோரத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ரவி, பத்தறை.