புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

கன்னியாகுமரி

தூர்வார வேண்டும்

வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மாண்டிவிளையில் முகுந்தன்குளம் உள்ளது. இந்த குளத்தை அம்மாண்டிவிளை சுற்றுவட்டார பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும், பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் முட்டம் கால்வாய் வழியாக இந்த குளத்திற்கு வந்து சேருவதால் சுற்றுவட்டார விவசாய நிலங்களும் பயன்பெற்று வந்தனர். தற்போது முறையாக பராமரிக்காததால் பல ஆண்டுகளாக குளத்தில் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே செடி,கொடிகளை அகற்றி குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லிங்கத்துரை, பிலாவிளை.

நடவடிக்கை தேவை

தலக்குளம் பகுதியில் ரேசன் கடை உள்ளது. இந்த கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக மண்எண்ணெய் கிடைப்பது இல்லை. இதனால் ஏழை மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மண்எண்ணெய் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மூர்த்தி, தலக்குளம்.

சுகாதார சீர்கேடு

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட மாதவபுரம் சந்திப்பு பகுதியில் இருந்து சின்னமுட்டம் சாலையின் திருப்பத்தின் அருகில் அரசு பள்ளிக்கு செல்லும் குறுகிய பாதை செல்கிறது. இந்த பாதையை பள்ளி மாணவ மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் பாதையில் இயற்கை உபாதை கழிக்கின்றனர். இதனால் நடைபாதையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இயற்கை உபாதை கழிப்பதை தடுக்க நடவடிக்கையும்,அவ்வுடத்தின் சுகாதாரத்தை பேணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வீரதாஸ், மாதவபுரம்.

பொதுமக்கள் அவதி

திங்கள்சந்தை வாரச்சந்தை நுழைவு வாயில் அருகில் உள்ள பாதாள கழிவுநீர் ஓடையானது சில காலமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவு நீரானது சாலையில் பாய்வதால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக சந்தைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பாதாள கழிவுநீர் ஓடையை முறையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடடுக்க வேண்டும்.

-அஜித், திங்கள்சந்தை.

விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்

நாகர்கோவில் குடிநீர் திட்ட பணிக்காக சாலையில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. கேசவன்புதூரில் இருந்து தோமையார்புரம் செல்லும் சாலையோரத்தில் குடிநீர் திட்ட பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு சிமெண்டு சிலாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், அதன் அருகில் சாலையோரத்தில் தோண்டிய பள்ளத்தை முறையாக மூடவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் மண் போட்டு நிரப்பிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பால்ராஜ், தோமையார்புரம்.

மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருவிளையில் முத்தாரம்மன் கோவில்தெரு உள்ளது. இந்த கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் ஓடையில் சேதமடைந்த மின்கம்பம் ஒன்று கிடைக்கிறது. இதனால் கழிவுநீர் ஓடையில் தண்ணீர் வடிந்தோட இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையில் கிடக்கும் மின்கம்பத்தை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபானந்து, பெருவிளை.

வீணாகும் குடிநீர்

விளவங்கோட்டில் இருந்து அருமனை நோக்கி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்கிறது. இதனால், சாலை சேதமடைவதுடன், அந்த வழியாக செல்லும் பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

-பாபு, அருமனை.


Next Story