புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து எஸ்.காவனூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், பரமக்குடி.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
ராமநாதபுரம் நகர் அம்மன் கோவில் அருகே உள்ள அல்லிகண்மாய் ஊருணி சமீபத்தில் தூர்வாரும் பணி தொடங்கி முழுமை பெறாமல் நிறுத்தப்பட்டது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன்னர் இந்த ஊருணியை தூர்வாரி மழைநீரை தேக்கி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், ராமநாதபுரம்.
தீர்வு காணப்படுமா?
ராமநாதபுரம் நகரில் சில தனியார் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
நடவடிக்கை தேவை
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியம் பொட்டகவயல் கிராமத்தில் பிரதமரின் ஜல் ஜீவன் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டம் இதுவரை செயல்படுத்தவில்லை. இப்பகுதி மக்கள் குடிநீருக்காக அவதி அடைந்து வரும் நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொட்டகவயல் கிராமத்தில் பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பொட்டகவயல்.
நீர்நிலைகள் தூர்வாரப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊருணிகள், குளங்கள், ஏரிகள், நீர் வரத்து கால்வாய்கள் போன்ற நீர் நிலைகளை எதிர்வரும் பருவமழைக்கு முன்பே தூர்வார வேண்டும். இதன் மூலம் நீர் ஆதாரங்களை சேமித்து விவசாயம், வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். எனவே பருவமழை வரும் முன்னர் நீர்நிலைகளை தூர்வார வேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்.