'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 14 Aug 2023 2:45 AM IST (Updated: 14 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பயணிகள் நிழற்குடை வேண்டும்

புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் அவதிப்பட்டபடியும், மழையில் நனைந்தபடியும் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே கம்பளிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

மின் விபத்து ஏற்படும் அபாயம்

பழனி பஸ் நிலையம் அருகே பாரதிதாசன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரின் அருகில் இரும்பு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டிரான்ஸ்பார்மரின் அருகே கொட்டப்பட்டுள்ள இரும்பு கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், பழனி.

எரியாத தெரு விளக்குகள்

திண்டுக்கல் மாநகராட்சி சாலையில் கடந்த சில நாட்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள தெருவிளக்குகளை அகற்றிவிட்டு புதிய தெரு விளக்குகளை பொருத்த வேண்டும்.

-நாகராஜன், திண்டுக்கல்.

தெருநாய்கள் தொல்லை

பெரியகுளம் நகர் பகுதியில் தெரு நாய்கள் ஏராளமாக சுற்றித்திரிகின்றன. இவை, அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர். எனவே தெருவில் சுற்றித் திரியும் நாய்களை நகராட்சி அதிகாரிகள் பிடித்து செல்ல வேண்டும்.

-கோபால், பெரியகுளம்.

நிரந்தர பணியாளர்கள் இல்லை

உத்தமபாளையம் ரேஷன் கடையில் நிரந்தர பணியாளர்கள் இல்லை. இதனால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு முறையாக ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. மேலும் நிரந்தர பணியாளர்கள் இல்லாததால் ரேஷன் கடையும் முறையாக செயல்படுவதில்லை. எனவே ரேஷன் கடையில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

-பக்ருதீன், உத்தமபாளையம்.

சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்

சாணார்பட்டி அருகே உள்ள கோணப்பட்டி தெற்கு தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தெருவில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவில் துர்வார வேண்டும். -காளிதாஸ், சாணார்பட்டி.

மீண்டும் தரைப்பாலம் அமைக்கப்படுமா?

கம்பம் போர்டு பள்ளி தெருவில் இருந்த தரைப்பாலம் சேதமடைந்ததால் நகராட்சி நிர்வாகம் அதனை இடித்து அகற்றியது. ஆனால் அந்த இடத்தில் மீண்டும் தரைப்பாலம் கட்டப்படவில்லை. இதனால் அந்த தெருவை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர்.

-செந்தில், கம்பம்.

குண்டும், குழியுமான சாலை

வருசநாட்டில் இருந்து முருக்கோடை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-ஊர்மக்கள், முருக்கோடை.

புதிய தார் சாலை அமைக்கப்படுமா?

வேடசந்தூர் அய்யர்மடம் மகாலட்சுமிபுரம் மற்றும் குரும்பப்பட்டி பூதிப்புரம் சாலையில் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். மேலும் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் விரைந்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.

-சந்திர சேகர், மாரம்பாடி.

குளம் ஆக்கிரமிப்பு

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்தில் ராமன்குளம் பகுதியில் குளத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரியப்பன், தோட்டனூத்து.

-----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Related Tags :
Next Story