புகார் பெட்டி
புகார் பெட்டி
பாதசாரிகள் அவதி
கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பின்குளத்தில் இருந்து பாத்திமாபுரம், கிள்ளிகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. விஷப்பூச்சிகள் வசிப்பிடமாக மாறி வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரதீஸ், கொல்லங்கோடு.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் மாநகராட்சியில் வாத்தியார்விளை சந்திப்பில் இருந்து கிருஷ்ணன்கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சில மாதங்களுக்கு முன் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பின் மூடப்பட்டது. ஆனால் சாலை முறையாக சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அலங்கார தரைகற்கள் பதிப்பதற்காக சாலையோரத்தில் கற்கள் மற்றும் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை பணிகள் நடைபெறவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-விபின், வாத்தியார்விளை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கார்திகைவடலி பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள். ஆனால் இந்த மையத்தில் கழிவறை, சமையல் அறை வசதிகள் இல்லை. மேலும் சுற்றுச்சுவரும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன. எனவே குழந்தைகள் நலன்கருதி அங்கன்வாடி மையத்தில் கழிவறை, சமையல்அறை வசதிகளுடன் சுற்றுச்சுவரும் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரராஜன், கார்த்திகை வடலி.
சுகாதார சீர்கேடு
தெங்கம்புதூர் அருகே காமச்சன்பரப்பு ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள கால்வாயை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக சிலர் பிளாஸ்டிக் கழிவுகள், இறந்த விலங்குகளின் உடல்களையும் வீசிசெல்கின்றனர். இதனால் கால்வாயில் பாயும் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த தண்ணீரை பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி கால்வாயில் கொட்டப்படுள்ள கழிவுகளை அகற்றுவதுடன் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், காமச்சன்பரப்பு.
சேதமடைந்த மின்கம்பம்
கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட தச்சக்கோட்டுக்குழி பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்து காணப்படும் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அஜி, தச்சக்கோட்டுக்குழி.
விபத்து அபாயம்
நாகர்கோவில் கோட்டார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை உள்ளது இருபுறரும் வடிகால் ஓடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஓடைகளில் பல இடங்களில் மேற்பகுதியில் போடப்பட்ட சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்தும், இல்லாமலும் காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த சிெமண்டு சிலாப்புகளை அகற்ற புதிய சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிக், டி.வி.டி.காலனி, கோட்டார்.