'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயன்படாத குடிநீர் தொட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணை அருகே உள்ள துடுகனஅள்ளி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மின் மோட்டாருடன் குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டது. குடிநீர்தொட்டி சேதமடைந்தும், மின் மோட்டாருக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும் காணப்படுகிறது. இதனால் தினமும் குடிநீருக்காக அலைய வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை பலன் இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் மோட்டாரை சரிசெய்து இந்த கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.
-ஜெமினி, துடுகனஅள்ளி, கிருஷ்ணகிரி.
====
ஆபத்தான மின்கம்பம்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த தொப்பப்பட்டி கிராமத்தில் கடைவீதிக்கு பின்புறம் உள்ள தேவேந்திரர் தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் தெரிந்தபடி இடிந்து விழும் நிலையில் காட்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
-ரமேஷ், தொப்பப்பட்டி, நாமக்கல்.
=====
மாணவர் விடுதி புதுப்பிக்கப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி உள்ளது. அந்த விடுதி கட்டிடம் ஆங்காங்கே விரிசல் விழுந்து சேதமடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கட்டிடத்தை சீரமைத்து புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சூர்யா, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி.
====
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் 19-வது வார்டு தர்மநகரில் 10 நாட்களுக்கும் மேலாக குப்பைகள் அள்ளவில்லை. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் சாலையோரம் குப்பைகள் சிதறிக்கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நோய் தொற்று ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளதால் தினமும் இந்த பகுதியில் குப்பைகளை அள்ளி, தூய்மையாக வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-விஜயகுமார், ஜங்ஷன், சேலம்.
===
வீணாகும் குடிநீர்
சேலம் மாநகரில் வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. இதில் ஒரு சில தெரு குழாய்களில் உரிய முறையில் குழாய்கள் அடைக்கப்படாமல் குடிநீர் நீண்ட நேரத்திற்கு பிறகும் வீணாக சாலையில் ஓடுகிறது. இதனால் மற்ற தெருக்களுக்கு குடிநீர் வினியோகத்தில் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் வழங்கும் பணியாளர்கள் அந்த பகுதிகளில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து முடிந்ததும் குடிநீர் வழங்குவதை நிறுத்தினால் குடிநீர் வீணாவதை தவிர்க்கலாம்.
-மகமூத், சின்ன கொல்லப்பட்டி, சேலம்.
===
பஸ் நிலையத்தை ஆக்கிரமித்த வாகனங்கள்
சேலம் இளம்பிள்ளை பஸ் நிலையத்தின் உள்ளே சரக்கு வாகனம், கார், ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்களை ஓட்டி வர டிரைவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் நிறுத்தும் பின்புறத்தில் திறந்தவெளியில் பலர் சிறுநீர் கழிக்கிறார்கள். மேலும் பஸ் நிலையத்துக்குள் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பயணிகள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். பஸ் நிலையத்தில் பஸ்கள் தவிர்த்து இதர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ்குமார், இளம்பிள்ளை, சேலம்.
===