புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

பூங்கா முகப்பில் பெயர் தெரியவில்லை

குழித்துறை நகராட்சியின் பராமரிப்பில் வெட்டுவெந்நி ஜங்ஷனில் பூங்கா உள்ளது. இது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யரின் 60-வது பிறந்த நாள் நினைவாக திருவிதாங்கூர் மன்னரால் கட்டப்பட்ட புராதான சின்னமாகும். தற்போது அந்த பூங்காவின் முகப்பில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் பெயர் மற்றும் ஆண்டு மட்டும் வெள்ளையடித்து பெயர் வெளியே தெரியாதவாறு உள்ளது. எனவே வரலாற்று சான்றோரின் பெயர் வெளியே தெரியும்படி வர்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.வினுகுமார், மார்த்தாண்டம்.

நடவடிக்கை தேவை

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பொருட்களை பாதுகாக்கும் அறை, கழிவறைகள் உள்ளன. ஆனால், அதற்கான உரிய கட்டணத்தை வசூலிக்காமல் அதிகப்படியான கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இதனால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் நலன் கருதி முறையான கட்டணத்தை வசூலிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.நாகராஜன், கிருஷ்ணன்கோவில்.

தெரு விளக்கு வேண்டும்

அருமநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் செக்கடி கிராமம் உள்ளது. இங்கு கோவில் தெரு பகுதியில் தெருவிளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனத்தில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே இங்கு தெரு விளக்கு அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ், செக்கடி.

பஸ் சீராக இயக்க வேண்டும்

அருமனையில் இருந்து தக்கலைக்கு அரசு பஸ் தினமும் மதியம் 2.30 மணிக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் தக்கலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஏறி பயணம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது இந்த பஸ் அடிக்கடி நிறுத்தப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே பஸ்சை சீராக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஷரணினா ஸ்டாலின், புல்லாணிவிளை.

உடைந்து தொங்கும் மீட்டர் பெட்டி

ஆசாரிபள்ளத்தில் இருந்து பெரும்செல்வவிளை செல்லும் சாலையில் பழைய ஆயில் சொசைட்டி எதிரில் உள்ள மின்கம்பத்தில் மீட்டர் பெட்டி உடைந்த நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும். அதற்கு முன் மீட்டர் பெட்டியை சீரமைக்க வேண்டும்.

-ஆன்டணி சதீஷ், கீழ ஆசாரிபள்ளம்.

காத்திருக்கும் ஆபத்து

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மணிமேடை பகுதியில், புறக்காவல் நிலைய கண்காணிப்பு கேமரா மையம் உள்ளது. அதன்அருகில் கேபிள் கொண்டு செல்லும் கம்பமானது முறிந்த நிலையில் வயர்கள் தொங்கி கொண்டிருக்கிறது. இந்த பகுதி கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்லும் பரபரப்பான பகுதியாகும். எனவே கேபிள் கம்பம் முழுவதுமாக முறிந்து விழுந்து அசம்பாவிதம் நடப்பதற்கு முன், காத்திருக்கும் ஆபத்தை உணர்ந்து கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.தர்மராஜன் ,அனந்தபத்மநாபபுரம்.

சுகாதார சீர் கேடு

சுசீந்திரம் 10 -வது வார்டு மாடதெருவில் கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் கழிவுநீர் பாய்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த தெரு வழியாகதான் பள்ளி மாணவர்கள் நடந்து செல்கிறார்கள். மேலும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வார சந்தைக்கு மக்கள் கழிவுநீரில் தான் நடந்து செல்ல வேண்டியது உள்ளது. எனவே கழிவுநீர் ஓடையில் உள்ள அடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், சுசீந்திரம்.


Next Story