புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள்தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நோய் பரவும் அபாயம்
நெல்லை பழைய பேட்டை 16-வது வார்டு தெற்கு தெருவில் நடைபாதையில் குப்பைகள், டயர்கள் தேங்கி கிடக்கிறது. இதை சரிவர அள்ளாததால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ராஜா, பழைய பேட்டை.
பொது கழிப்பறை அமைக்கப்படுமா?
காவல்கிணறு சந்திப்பு பகுதியானது வள்ளியூருக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியாக உள்ளது. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் காவல்கிணறு சந்திப்பு அமைந்துள்ளது. ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பொது கழிப்பறை வசதி, குடிநீர் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் கடுமையாக அவதிப்படுகிறார்கள். ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் பொது கழிப்பறை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஜெயபால், காவல்கிணறு.
குடிநீர் குழாயில் உடைப்பு
தென்காசி மாவட்டம் கடையம் மெயின் ரோட்டில் இருந்து சந்தை வரை குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் தேங்குகிறது. ஏராளமான வாகனங்கள் செல்லும் இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து காயம் அடையும் அபாயம் உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பு, சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
கண்ணன், கேளையாபிள்ளையூர்.
சுகாதாரக்கேடு
கடையம் யூனியன் தெற்கு கடையம் பஞ்சாயத்து கலையரங்கம் அருகே உள்ள கழிப்பறை சரியான பராமரிப்பு இல்லாததால், எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. பக்கத்தில் கோவிலும் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். எனவே, கழிப்பறையை சுத்தமாக வைத்திட பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
திருக்குமரன், கடையம்.
வாகன ஓட்டிகள் அவதி
அம்பையில் இருந்து தென்காசி செல்லும் ெநடுஞ்சாலையில் அய்யனார்குளம் விலக்கு அருகில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவு பகுதி சாலையில் ஆங்காங்கே பல இடங்களில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். வாகன ஓட்டிகளின் நலன் கருதி அந்த வளைவு பகுதியில் உள்ள ஆபத்தான பள்ளங்களை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அம்ஜத், முதலியார்பட்டி.
நாய்கள் தொல்லை
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் 8-வது வார்டு பள்ளிக்கூடம் தெற்கு தெருவில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களை திடீரென்று துரத்துகிறது. இதனால் தெருவில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, நாய்கள் தொல்லையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
முருகன், கிருஷ்ணாபுரம்.
நூலகம் அமைக்கப்படுமா?
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து செந்தியம்பலம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் உள்ளனர். இங்குள்ள படித்த இளைஞர்கள், படித்துக் கொண்டு இருக்கும் மாணவ-மாணவிகள், பொதுமக்களின் ஓய்வு நேரத்தை பயன் உள்ளதாக கழிக்க அரசு சார்பில் நூலகம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஆனந்தராஜ், செந்தியம்பலம்.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
கோவில்பட்டி வட்டம் பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து ராஜீவ்நகரில் வலதுபுறத்தெருவில் கடந்த 15 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரப்படவில்லை. வாறுகால் உடைந்து தெருவில் குளம் போல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் மழை பெய்தால் தண்ணீர் வடிவதற்கு 3 நாட்கள் மேல் ஆகிறது. வீடுகளிலும் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சுந்தரராஜன், ராஜீவ்நகர்.
குண்டும், குழியுமான சாலை
ஆழ்வார்திருநகரி ஒன்றியம் புறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியபாளையத்தில் இருந்து கல்லாம்பாறை செல்லும் தார் சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியில் அய்யனார் ஈஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இங்கு தினமும் சிறப்பு பூைஜகள் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். ஆனால், சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த வழியாக பள்ளிகளுக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்படுகிறார்கள். ஆகவே குண்டும், குழியுமாக உள்ள இந்த தார் சாலைைய சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
முருகேசன், ஓடைக்கரை.
ஆபத்தான மின்கம்பம்
நாலுமாவடியில் இருந்து மேலபுதுக்குடி செல்லும் வழியில் திருமலாபுரம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் கடந்த 6 மாதங்களாக பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டுகிறேன்.
மும்மூர்த்தி, நாலுமாவடி.