தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்

தர்மபுரி பஸ் நிலையத்தில் சுகாதார கேடு

தர்மபுரி டவுன் பஸ் நிலையத்திற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். டவுன் பஸ் நிலைய வளாகத்தில் 50- க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. அதிக பொதுமக்கள் மற்றும் பயணிகள் நடமாட்டமுள்ள இந்தப் பகுதியில் சேரும் குப்பைகள் டவுன் பஸ் நிலைய பகுதி முழுவதும் பரவிக்கிடக்கின்றன. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. இதை தடுக்க டவுன் பஸ் நிலையத்தில் குப்பைகளை போட ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். குப்பைத் தொட்டிகளில் மட்டுமே குப்பைகளை போட வேண்டும் என்று டவுன் பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் மற்றும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா?

-பிரதீப், தர்மபுரி.

-----------

ஏர்ஹாரன்கள் அகற்றப்படுமா?

கிருஷ்ணகிரி நகரில் இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடிய பலரும் தங்களின் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பொருத்தி உள்ளனர். மேலும் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பின்னால் வந்து அந்த ஹாரனை அடித்து அச்சுறுத்துகிறார்கள். அவ்வப்போது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து, இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ், பெரிய மாரியம்மன் கோவில் தெரு, கிருஷ்ணகிரி.

===

நோய் பரவும் அபாயம்

நாமக்கல்- சேலம் மெயின் ரோடு பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே அன்பு நகர் செல்லும் வழியில் பாதாள சாக்கடை கால்வாய் உள்ளது. அந்த சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் தேங்கி குளம்போல் காட்சிஅளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வாரி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.

-சதீஷ்குமார், நாமக்கல்.

====

மரக்கிளைகள் அகற்றப்படுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் சாலையோரம் உள்ள மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசுவதால் காற்று அடிக்கும் போதும், மழை பெய்யும் போதும் மின் இணைப்பு துணடிக்கப்படுகிறது. மேலும் அருகே உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அச்சத்துடனே இருக்கிறார்கள். இதுபற்றி பலமுறை கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.

-த.அஜித்குமார், புளியம்பட்டி, கிருஷ்ணகிரி.

====

குண்டும், குழியுமான சாலை

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த இருகாலூர் கிராமத்தில் இருந்து காவேரி காடு, அரியாம்பாளையம், செட்டி காடு, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கே மேட்டுப்பாளையத்தில் இருந்து மோர்ப்பாளையம் செல்லும் சாலையில் இருந்து வழித்தடம் பிரிந்து மேலே குறிப்பிட்டுள்ள ஊர்களுக்கு செல்கிறது.

சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள், மண் கொட்டப்பட்டு பணிகள் நடந்தது. ஆனால் இதுவரை தார் சாலை அமைக்க வில்லை. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எப்போதுதான் புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களோ என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

-ஆனந்த், இருகாலூர், சேலம்.

=====

சாலையில் திடீர் பள்ளம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தையொட்டி உள்ள செரி ரோட்டில் ஒய்.எம்.சி.ஏ. எதிரில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் முக்கியமான சாலையில் ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

-ராஜன், குகை, சேலம்.

===

சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

சேலம் மாவட்டம் மல்லூரில் இருந்து பள்ளிதெருபட்டி, மாக்கனூர் வழியாக பனமரத்துப்பட்டிக்கு தார்சாலை செல்கிறது. இதில் மல்லூர் அத்திகுட்டை பகுதியை அடுத்துள்ள தனியார் மருத்துவமனை அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் மேம்பாலத்தின் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தின் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கலை, மல்லூர், சேலம்.

====

விரிசல் விழுந்த பள்ளிக்கட்டிடம்

சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த மூலக்காடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளி கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் விழுகின்றன. மேலும் பள்ளி கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பிரபு, மூலக்காடு, சேலம்.


Next Story