தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குரங்குகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி நகரை சுற்றி வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இங்கிருந்து குரங்குகள் அடிக்கடி ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்கின்றன. குறிப்பாக கலெக்டர் அலுவலகத்தில் சுற்ற கூடிய குரங்குகள் அங்கு நிற்கும் இரு சக்கர வாகனங்களின் பெட்ரோல் டேங்க் கவரை திறந்து அதில் இருக்கக்கூடிய பொருட்களை எடுத்து வீசி விடுகின்றன. அதேபோல நகருக்குள் வரக்கூடிய குரங்குகள் கேபிள் வயர்களை அறுத்தும், வீடுகளில் முன்பு வைத்துள்ள பொருட்களை சேதப்படுத்தியும் விடுகின்றன. இந்த குரங்குகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும்.
-முரளி, கிருஷ்ணகிரி.
====
திறக்கப்படாத பொதுக்கழிப்பிடம்
சேலம் மாவட்டம் வீரக்கல் கிராமத்தில் பொதுகழிப்பிடம் கட்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அந்த கழிப்பிடம் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் திறந்தவெளியை பயன்படுத்துவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த கழிப்பிடத்தை விரைவில் திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ஐ.மணிகண்டன், வீரக்கல்.
===
இருளில் மூழ்கும் ரெயில்வே மேம்பாலம்
தர்மபுரி அருகே கடத்தூர் பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலம் வழியாக பாலக்கோடு, ஓசூர், மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள், பிற வாகனங்கள் சென்று வருகின்றன. மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் உள்ள மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் மேம்பாலத்தின் ஒரு பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கி விடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இரவு நேரத்தில் ரெயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் முழுமையாக எரிய நடவடிக்கை வேண்டும்.
-பெரியசாமி, தர்மபுரி.
===
மரக்கிளைகள் அகற்றப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதி சாலையோரம் உள்ள மரக்கிளைகளில் மின் கம்பிகள் உரசி செல்கின்றன. மரக்கிளைகளில் அடிக்கடி அந்த மின்கம்பிகள் உரசுவதால் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மேலும் அதன் அருகே வீடுகளும் உள்ளன. இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மரக்கிளைகளை வெட்டி அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், கெலமங்கலம், கிருஷ்ணகிரி.
===
சேதமடைந்த கோவில் படிக்கட்டுகள்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் தேர்நிலையம் பின்புறம் வரலாற்று சிறப்புமிக்க கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் கோபுரம் நோக்கி உள்ள படிக்கட்டுகள் சரியான பராமரிப்பின்றி சேதமடைந்து செடி, கொடிகள் முளைத்து காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட வாய்ப்பு உள்ளது. எனவே நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்த பழமையான படிக்கட்டுகளை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.பாஸ்கர், தாரமங்கலம், சேலம்.
===
சேதமடைந்த சாக்கடை கால்வாய் சிலாப்புகள்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி 15-வது வார்டு மேற்கு தெருவில் சாலையை இணைக்கும் சாக்கடை கால்வாய் உள்ளது. அந்த பகுதியில் சாக்கடை கால்வாயின் மேல் உள்ள சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து பெயர்ந்து திறந்த வெளியில் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இதனால் பெண்கள், வயதானவர்கள் அடிக்கடி அந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இதனை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என். டி. சிவலிங்கம், நாமக்கல்.
===
சாலையின் நடுவே மின்கம்பம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்-சேலம் மெயின் ரோட்டில் வங்கி எதிரே குறுகலான இடத்தில் ரோட்டின் நடுவே மின்கம்பம் உள்ளது. இந்த மின் கம்பங்களால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பெரிதும் இடையூறாக உள்ளது. விபத்துகள் ஏற்படுவதற்குள் சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.
-க.மதன்குமார், குமாரபாளையம், நாமக்கல்.
==
பள்ளிக்கட்டிடங்கள் சீரமைக்கப்படுமா?
சேலம் மாநகரத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக் கட்டிடங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளன. அந்த பள்ளிக்கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் விழுந்து , சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் தெரிந்தபடி காட்சி அளிக்கிறது. சில பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றன. மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜன், குகை, சேலம்.
===
ஆபத்தை உணராத கல்லூரி மாணவிகள்
பர்கூரை அடுத்த அங்கிநாயனப்பள்ளியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. கல்லூரி அமைந்துள்ள இடம் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை ஆகும். இதில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் எப்போதும் பயணிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிக்கு செல்வோருக்காக நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்தை உணராத மாணவிகள், நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல் சாலையை கடக்கின்றனர். எனவே மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி நடைமேம்பாலத்தை பயன்படுத்த அதிகாரிகளும், கல்லூரி நிர்வாகமும் அறிவுறுத்த வேண்டும்.
-முருகன், பர்கூர்.