தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்

'தினத்தந்தி'க்கு பாராட்டு

சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டி பஞ்சாயத்து 8-வது வார்டில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் மழைநீரும் கலந்து குளம்போல் காட்சி அளிப்பதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளன என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதி செய்தி வெளியானது. இதனையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அந்த பகுதிக்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்கினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-பொதுமக்கள், ஆண்டிப்பட்டி, சேலம்.

===

சுற்று சுவர் அமைக்கப்படுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா அலுவலகம் முன்பு சுற்றுசுவர் இல்லை. இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவதுடன், இரவு நேரங்களில் மர்ம நபர்களின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.

-சி.செந்தில், ஈஸ்வரதாசரப்பள்ளி, கிருஷ்ணகிரி.

====

சீரமைக்க வேண்டிய சாலை

தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் ராமக்காள் ஏரி முதல் பழைய தர்மபுரி வரை உள்ள சுமார் 1 கி.மீ. வரை சாலையின் இருபுறங்களிலும் பல இடங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள், கார்களில் செல்பவர்கள் வாகனங்களை முந்தி செல்லும்போது விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே அந்த பகுதியில் இரு புறமும் உள்ள தார் சாலையை சீரமைக்க வேண்டும். இதன் மூலம் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-மணிகண்டன், தர்மபுரி.

=====

பஸ்கள் நின்று செல்லுமா?

நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் சேலத்தில் இருந்து நாமக்கல் சென்று வரும் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் வெண்ணந்தூர் பகுதியில் இருந்து வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.

====

ஆபத்தான குடிநீர் தொட்டி

சேலம் வட்டமுத்தாம்பட்டியில் தொடக்கப்பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்த குடிநீர் தொட்டி மூலம் வட்டமுத்தாம்பட்டி புது காலனி 1, 2 ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கான்கிரீட் தூண்கள் சேதமடைந்து விரிசல் விழுந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. அருகே பள்ளிக்கட்டிடம், பொதுமக்கள் வசிக்கின்றனர். கம்பிகள் வெளியே தெரிந்தபடி இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற பல முறை புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, வட்டமுத்தாம்பட்டி, சேலம்.

====

நோய் பரவும் அபாயம்

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி நெசவாளர் காலனி குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. அந்த பன்றிகள் அங்குள்ள கழிவு பொருட்களை கிளறி விடுவதாலும், ஆங்காங்கே சுற்றித் திரிவதாலும் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும், பள்ளி செல்லும் குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

-செ.ராஜேஷ்குமார், ஆட்டையாம்பட்டி, சேலம்.

=====


Next Story