புகார் பெட்டி
புகார் பெட்டி
வழிகாட்டு பலகை அகற்றப்பட்டது
நாகர்கோவில்-திருநெல்வேலி நாற்கரசாலையில் தேரேகால்புதூர் பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் எதிரே சாலைப்பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. ஆனால், அங்கு வழிகாட்டு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் குழப்பத்திற்கும், சிரமத்திற்கும் உள்ளாகி வந்தனர். இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வழிகாட்டு பலகையை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
குளத்தை தூர்வார வேண்டும்
மார்த்தாண்டத்தில் இருந்து கொடுங்குளம் செல்லும் சாலையில் கொல்லக்குளம் உள்ளது. இந்த குளம் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி மாசடைந்து காணப்படுகிறது. மேலும் பாசிகள் படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், கொடுங்குளம்.
சாலையில் பள்ளம்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அவ்வை சண்முகம் சாலை உள்ளது. இந்த சாலையில் கட்டபொம்மன் சந்திப்பு பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.இசக்கிமுத்து, நாகர்கோவில்.
வீணாகும் குடிநீர்
ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் மேற்கு கடற்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தர்மபுரம் அருகே இரண்டு இடங்களில் கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக சாலையின் கீழே பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி வீணாக சாலையில் பாய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.
நடவடிக்கை தேவை
சூழாலில் இருந்து கொல்லங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பாத்திமா நகர் பகுதியில் உள்ள பாலத்தின் இரண்டு பக்கமுள்ள பக்கச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பேரிகார்டுகள் வைத்து அந்த வழியாக பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வெகுதூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெஜி, அடைக்காகுழி.
கழிவு மண்ணை அகற்ற வேண்டும்
தக்கலை அருகே உள்ள முகமாத்தூர் பகுதியில் திக்கணங்கோடு கால்வாயில் சமீபத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்தது. தூர்வாரிய கழிவு வண்டல் மண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் கால்வாயின் மேல் பகுதியில் சாலையில் குவித்து வைத்துள்ளனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஆகவே கழிவு மண்ணை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், முகமாத்தூர்.