புகார் பெட்டி


புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டி

தென்காசி

`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

அம்பை-தென்காசி மெயின்ரோடு பொட்டல்புதூர் மெயின்பஜார் பகுதியில் சாலையோரத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் இருந்தது. இதுபற்றி `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு வாசகர் அம்ஜத் அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரம் ஆனது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தின் அடிப்பகுதியை சுற்றிலும் சிெமண்டு காங்கிரீட் அமைத்து மின்கம்பம் பலப்படுத்தப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

நாய்களால் வாகன ஓட்டிகள் அவதி

நெல்ைல மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் சாலைகளில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி அவதிப்படுகிறார்கள். எனவே சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துக்குமார், கல்லிடைக்குறிச்சி.

சீராக குடிநீர் வினியோகம் தேவை

நெல்லை மாவட்டம் சங்கர்நகர் சிறப்பு நிலை பேரூராட்சி 3-வது வார்டு பண்டாரக்குளம் வடக்கு 2-வது தெருவில் ஆற்றுக்குடிநீர் பொதுநல்லி அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது சீராக குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் குடங்களை தூக்கிக்கொண்டு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சீராக குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும்.

-முருகன், பண்டாரக்குளம்.

குப்பைகளால் சுகாதார கேடு

மேலப்பாளையம் மண்டலம் புதிய வார்டு எண்-47 வடக்கு தைக்காத்தெரு அருகே நீர்நிலை பாதைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் அங்கு சுகாதார கேடு நிலவுகிறது. மேலும் மாடுகள் கூடும் இடமாகவும் மாறி விட்டது. இதை சரி செய்ய வேண்டும்.

-காதர்மீரான், மேலப்பாளையம்.

ஆபத்தான மின்கம்பம்

நெல்லை வி.எம்.சத்திரம் லட்சுமிநகர் பகுதி தெருவில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் கீழ்ப்பகுதி சிமெண்டு பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான இந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.

-ஆறுமுகசங்கர், வி.எம்.சத்திரம்.

மின்கம்பியில் மரக்கிளை

தென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் மேலகரம் ஓம்சக்தி கோவில் அருகே மின்கம்பியில் மரக்கிளை விழுந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயக்குமார், மேலகரம்.

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

தென்காசியில் இருந்து நெல்லைக்கு தினசரி ஏராளமான எஸ்.எப்.எஸ். பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தென்காசி முதல் நெல்லை வரையிலான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் ஒரு சில எஸ்.எப்.எஸ். பஸ்கள் இந்த வழித்தடத்தில் உள்ள மகிழ்வண்ணநாதபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் நிற்காமல் சென்று விடுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலன்கருதி அனைத்து நிறுத்தங்களிலும் எஸ்.எப்.எஸ். பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

கிணற்றின் அருகில் அசுத்தம்

ஆலங்குளம் 6-வது வார்டில் ஊர்கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றின் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் அதன் அருகில் அசுத்தம் செய்கிறார்கள். மது அருந்துபவர்களும் அதன் அருகில் அமர்ந்து குடித்து விட்டு செல்கிறார்கள். எனவே கிணற்றின் அருகில் அசுத்தம் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டும்.

-சுரேஷ், ஆலங்குளம்.

பராமரிப்பு இல்லாத பாலம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஒன்றியம் திருக்களூர் பால்குளத்தில் அமைந்துள்ள வாய்க்கால் பாலம் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலத்தின் சுவர்கள் பழுதடைந்துள்ளது. இந்த பாலத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வருண்குமார், பால்குளம்.

எரியாத தெருவிளக்குகள்

ஸ்ரீவைகுண்டம் தாலுகா கிளாக்குளம் குருக்கள்கோட்டை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் தெருக்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரியச்செய்ய வேண்டும்.

-முத்துராஜ், குருக்கள்கோட்டை.

சாலையின் நடுவே மின்கம்பம்

ஸ்ரீவைகுண்டம் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்திற்கு பின்புறம் மின்கம்பம் நடுரோட்டில் உள்ளது. வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகிறார்கள். எனவே அதை சரிசெய்ய வேண்டும்.

-ஸ்ரீரெங்கன், ஸ்ரீவைகுண்டம்.



Next Story