'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 Jun 2022 2:27 AM IST (Updated: 13 Jun 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 8939278888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்

'தினத்தந்தி'க்கு பாராட்டு

சேலம் அம்மாபேட்டை 34-வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அய்யாசாமி பூங்கா உள்ளது. இங்கு செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சி அளிப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதன் தொடர்ச்சியாக, பூங்காவின் ஒரு பகுதியை மாநகராட்சியினர் சீரமைத்துள்ளனர். இதையடுத்து பூங்கா சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-ரத்தினம் விஸ்வா, சேலம்.

===

விபத்து அபாயம்

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி ரெயில்வே பாலத்தின் கீழ் பைபாசில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் சாலையின் ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சிமெண்டு பைப்புகளை கொண்டு மூடி உள்ளனர். தற்போது இந்த பைப்புகள் சேதமடைந்துள்ளன. விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் இதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

-மணிகன்டண் பெருமாள், சேலம்.

===

மின்கம்பங்கள் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி ஊராட்சி கே.வி.கோவில் கொட்டாய், குள்ளன் கொட்டாய், நாடார் தோட்டம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. அவை பல ஆண்டுகளாகவே பராமரிப்பின்றி உள்ளன. இந்த மின் கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே ஏதேனும் விபத்துகள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவன், சோக்காடி, கிருஷ்ணகிரி.

===

சாலையில் பழுதாகி நின்ற அரசு பஸ்

தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு செல்லும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஆங்காங்கே பழுதடைந்து சாலையிலேயே நிற்பது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக காரிமங்கலத்தில் இருந்து தர்மபுரி செல்லும் அரசு பஸ் சமீபத்தில் பழுதாகி நடுவழியில் சாலையில் நின்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதுபோன்று அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்களை முறையாக ஆய்வு செய்து இயக்க வேண்டும்.

-ரவி, காரிமங்கலம் தர்மபுரி.

===

ஆபத்தான பயணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சில வாலிபர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் செல்கிறார்கள். மேலும் முன் சக்கரத்தை (வீலிங்) உயர்த்தியபடி மற்ற வாகனங்களுக்கு இடையூறாக சாலைகளில் வட்டமிட்டவாறு சாகச பயணம் என்ற பெயரில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளை இடிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டும் இவர்களால் பலர் விபத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச்செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மஞ்சுநாத், சூளகிரி.

===

பூங்கா அமையுமா?

சேலம் சூரமங்கலத்தில் 5 ரோடு செல்லும் சாலை மற்றும் திருவாக்கவுண்டனூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலைகள் இணையும் இடத்தில் உள்ள பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பங்களிப்புடன் சிறிய பூங்கா அமைப்பதற்காக திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு பூங்கா அமைப்பதற்கான எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை. இந்த வழியாக சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். எனவே இந்த இடத்தில் சிறிய பூங்கா மின்விளக்கு வசதியுடன் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுப்பார்களா?

-எஸ்.சுதர்சனன், ஆண்டிப்பட்டி, சேலம்.


Next Story