புகார் பெட்டி
புகார் பெட்டி
விபத்து அபாயம்
பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட திட்டுவிளையில் இருந்து மார்த்தால் செல்லும் சாலையில் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஏராளமான வாகனங்கள், பஸ்கள் சென்று வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால், அந்த வழியாக செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், பள்ளத்தில் கவிழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பக்கவாட்டு சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.சேக் அப்துல்காதர், மார்த்தால்.
பஸ் வசதி தேவை
மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை, அடைக்காக்குழி, செங்கவிளை, பீலிக்குளம், சூழால், கொல்லங்கோடு வழியாக இரையுமன்துறைக்கு 82 'ஜி' பஸ் இயக்கப்பட்டது. இதனால், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது, இந்த பஸ் அடைக்காக்குழி சாலை வழியாக வராமல் களியக்காவிளையில் இருந்து சூழால், கொல்லங்கோடு வழியாக இயக்கப்படுகிறது. இதனால், அந்த கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி அடைக்காக்குழி வழியாக பஸ்சை சீராக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரிஜி, முன்சிறை.
வீணாகும் குடிநீர்
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் வழியாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு முக்கடல் அணையில் இருந்த குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இதற்காக சாலையில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன. தற்போது துவரங்காடு பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.
சீராக பஸ் இயக்கப்படுமா?
மிடாலத்தில் இருந்து 7/46 'வி' வழித்தடத்தில் தேவிகோடு, தொழிச்சல், இருக்கலம்பாடு, காக்கவிளை, கருங்கல், திங்கள்நகர் வழியாக நாகர்கோவிலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பல கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது அந்த பஸ் தினமும் 3 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி முழுநேரமும் சீராக பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆகாஷ், தொழிச்சல்.
வடிகால் ஓடை தேவை
இடைக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்பாலையில் இருந்து குடுக்கச்சிவிளை, மாலைகோடு பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரங்களில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. மழைகாலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தண்ணீர் வடிந்தோட மழைநீர் வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டார்வின், மேல்பாலை.
பட்ட மரத்தை அகற்றுவார்களா?
குமாரபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாறுவிளை பகுதியில் படப்பைகுளம் உள்ளது. இந்த குளத்தின் கரையோரம் உள்ள சாலையோரத்தில் ஏராளமான தென்னை மரங்கள் நிற்கின்றன. அதில் சில மரங்கள் பட்டுப்போன நிலையில் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, பட்டுப்போன தென்னை மரங்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதிஷ் நாகமணி, ஆழ்வார்கோவில்.