'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்

சேமிப்பு கிடங்காக மாறிய நூலகம்

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா கம்மம்பட்டி கிராமம், சோளியானூர் ஊராட்சியில் ஊரக கிராம நூலகம் உள்ளது. தற்போது அந்த நூலகம் பராமரிப்பு இன்றி பழைய பொருட்களை வைக்கும் இடமாகவும், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான மூலப்பொருட்களை வைக்கும் சேமிப்பு கிடங்காகவும் மாறி உள்ளது. மேலும் இந்த நூலகமானது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோளியானூர் அருகேயே இருப்பதால் மாணவர்களுக்கு தேவையான அளவு புத்தகங்கள் மற்றும் உட்கார்ந்து படிக்கும் அளவிற்கு வசதிகள் இல்லை. எனவே சேமிப்பு கிடங்காக மாறியுள்ள இந்த நூலகத்தை சரி செய்து செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

-ச.ஆனந்தகுமார், தர்மபுரி.

====

சாலையில் ஓடும் கழிவு நீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா 3-வது வார்டில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீர் சாலையில் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கதிர், ராசிபுரம்.

====

வேகத்தடை அமைக்க வேண்டும்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. தினமும் காலையில் பணிமனையில் இருந்து வரும் வாகனங்களும், பைபாசில் இருந்து ஊருக்குள் வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் அருணாச்சலம் புதூர் வழியாக தான் செல்ல வேண்டும். இங்குள்ள சாலையில் திரும்பும் வளைவில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதன் காரணமாக அங்கு அடிக்கடி சிறு, சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

-சிவா, தாரமங்கலம், சேலம்.

தர்மபுரி பஸ் நிலையம் அருகே பூங்காவின் தெற்கு பகுதியில் இரண்டு இடங்களில் 4 ேராடு சந்திப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சிலர் வாகனங்களில் வேகமாக வருவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வரும், இந்த சாலை சந்திப்புகளில் விபத்துக்களை தடுக்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.

-முனியப்பன், தர்மபுரி.

====

ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா ஆண்டகளூர் கேட் வழியாக நாள்தோறும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், மக்கள் வாகனங்களில் அதிகளவில் சென்று வருகிறார்கள். ஆனால் இந்த பகுதியில் போதுமான அளவில் ஏ.டி.எம். மையங்கள் இல்லை. ஒரு சில ஏ.டி.எம். மையங்கள் இருந்தாலும் சரிவர இயங்குவதில்லை. எனவே இந்த பகுதியில் போதுமான அளவில் ஏ.டி.எம். மையங்கள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில் ராஜா, ராசிபுரம், நாமக்கல்.

====


Next Story