'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதார சீர்கேடு
தர்மபுரி அன்னை சத்யாநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் குப்பைகள், கழிவு பொருட்கள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இவை சாலையில் பரவி கிடப்பதால் அந்த பகுதியில் சுற்றுப்புறச்சூழல் சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே அந்தப் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். குப்பைகள் சேர்ந்ததும் அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், தர்மபுரி.
===
பெயர்ந்து கிடக்கும் பெயர் பலகை
சேலம் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் கீரைக்கார தெரு உள்ளது. அந்தத் தெருவின் பெயர் பலகை கடந்த சில மாதங்களாக பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் தெரு பெயர் பலகை வேறு திசை நோக்கி உள்ளதால் பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தபால்காரர், புதிதாக அந்த தெருவுக்கு வருபவர்கள் சிரமப்பட வேண்டி இருக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெரு பெயர்ப்பலகையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், 4 ரோடு, சேலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பகுதி ஓசூர், தளி, கெலமங்கலம் மற்றும் அஞ்செட்டி ஆகிய பகுதிகளுக்கு நான்கு சாலைகள் பிரிந்து செல்லும் சாலைகளில் பெயர் பலகைகள் வைக்காமல் உள்ளன. இதனால் எந்த சாலை, எந்த ஊர் செல்கிறது என்று தெரியாமல் வாகனங்கள் ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த பகுதியில் பெயர் பலகை வைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூர்யா, ஓசூர்.
======
குழந்தைகள் மையத்தில் ஆபத்து
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த சேடப்பட்டியில் குழந்தைகள் மையம் அமைந்துள்ளது. சிமெண்டு ஓடுகளால் அமைந்துள்ள அந்த மையத்தின் மேற்க்கூரை தற்போது சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே விரிசல் விழுந்து மழைநீர் உள்ளே ஒழுகுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அசம்பாவிதங்கள் நடக்கும் முன் மையத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மணி, ஆரூர்பட்டி, சேலம்.
====
புதிய தார்சாலை அமைக்க வேண்டும்
சேலம் சூரமங்கலத்தில் இருந்து திருவாக்கவுண்டனூர் வழியாக கந்தம்பட்டி, காட்டூர், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் பள்ளி, கல்லூரி, வேலைக்கு நடந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்று வருகிறார்கள். தற்போது இந்த சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருக்கிறது. மேலும் சாக்கடை கழிவுநீர் மற்றும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கந்தசாமி, ஆண்டிப்பட்டி, சேலம்.
===
மேம்பாலங்களில் சேதமடைந்த தடுப்பு சுவர்
சேலம் மாநகரத்தில் உள்ள மேம்பாலங்களில் ஆங்காங்கே தடுப்பு சுவர்கள் சேதமடைந்து, இடிந்து விழுந்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வாகனங்களை ஓட்டி செல்கிறார்கள். மேலும் தடுப்பு சுவர்கள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும்.
-கோபால், குகை, சேலம்.
====
அடிப்படை வசதி வேண்டும்
தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் அடுத்த சுவளூபட்டி கிராமம் வாரியார் பள்ளி எதிர் தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த தெருவில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர், சாக்கடை கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
-முனியப்பன், சவுளூபட்டி, தர்மபுரி.
===
சாலை அகலப்படுத்தப்படுமா?
சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமம் தெத்து மலைப்பகுதியில் தம்மம்பட்டி செல்கின்ற சாலையில் 2 அபாயகரமான குறுகலான வளைவு உள்ளது. அந்த வளைவு மலைப் பகுதியாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள், சரியாக தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த வளைவை அகலப்படுத்தி வாகன விபத்தை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெரியசாமி, கடம்பூர், சேலம்.