'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகாருக்கு உடனடி தீர்வு

நெல்லை சீவலப்பேரி ரோடு கிருபாநகர் பிள்ளையார் கோவில் அருகில் தெருவிளக்குகள் கடந்த சில வாரங்களாக எரியவில்லை என்று கிருபாநகரைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் அந்த மின்விளக்குகளை சரிசெய்து உள்ளனர். தற்போது மின்விளக்குகள் ஒளிர்கிறது. எனவே, கோரிக்கை உடனடியாக நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

சேறும், சகதியுமான சாலை

நெல்லை அருகே உள்ள சேந்திமங்கலத்தில் சாலை கடந்த ஒரு ஆண்டாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். சங்கு, குறிச்சிகுளம்.

பயணிகள் நிழற்கூடம் வேண்டும்

ராதாபுரம்-நக்கநேரி சாலையில் அமைந்துள்ள மகேந்திரபுரத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் நின்று தவிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

சாலையில் செல்பவர்கள் அச்சம்

நாங்குநேரி தாலுகாவில் உள்ள மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி வளர்ந்து வரக்கூடிய நகரமாகும். இங்கு அரசு, தனியார் பள்ளிகள் உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து, சைக்கிள்களில் செல்கிறார்கள். ஆனால், இந்த பகுதியில் மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும்போது, ஏராளமான கனரக வாகனங்கள் பாரம் ஏற்றிச் செல்கிறது. இதனால் மாணவர்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே, மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும்போது, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். அல்லது வேறு வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? மணிகண்டன், கடம்பன்குளம்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

அம்பை-தென்காசி நெடுஞ்சாலையில் கடையம் பாரதிநகர் அருகில் இருந்து சந்தை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சேதம் அடைந்து, குண்டும்-குழியுமாக கிடந்தது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதேபோல் திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து பொட்டல்புதூர் பஸ் நிறுத்தம் அருகில் வரை சாலை மோசமாக கிடக்கிறது என்று கடையத்தை சேர்ந்த திருக்குமரன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன்பேரில் தற்போது சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

பஸ்கள் நின்று செல்லுமா?

மேலநீலிதநல்லூர் ஊராட்சி சேர்ந்தமரம் அருகே உள்ள பசும்பொன்நகரில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் தினமும் வெளியூர்களுக்கு சென்று படித்து வருகிறார்கள். ஆனால், இந்த வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்கள் பசும்பொன்நகரில் நிற்பது இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் சிரமப்படுகிறார்கள். எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பஸ்கள் நின்று செல்ல வேண்டுகிறேன். மணிகண்டன், சேர்ந்தமரம்.

ஆபத்தான பள்ளம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில் நிலையம் எதிரே மில் தெரு நுழைவு வாயில் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், இந்த பள்ளம் மூடப்பட்டதால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். ஆகவே, அந்த பள்ளத்தை உடனடியாக மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். முருகன், கோவில்பட்டி.



Next Story