'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்

பஸ் நிலையத்திற்குள் வராத பஸ்கள்

கிருஷ்ணகிரி வழியாக ஓசூர், பெங்களூருவுக்கு செல்லும் பெரும்பாலான அரசு விரைவு பஸ்கள், கிருஷ்ணகிரி பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை. மாறாக ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன. இதனால் அங்கிருந்து பஸ் நிலையத்துக்கு பயணிகள் ஆட்டோ பிடித்து வரும் நிலை உள்ளது. எனவே அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சத்யமூர்த்தி, கிருஷ்ணகிரி.

====

சாலை விதிகளை மீறும் இருசக்கர வாகனங்கள்

தர்மபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்ட சாலைகளில் வாகன போக்குவரத்து விதிகளை மீறி எதிர்திசையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நகர பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் வாகனங்களில் வரக்கூடாது என்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

-கணேசன், தர்மபுரி.

===

வீணாகும் தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பர்கூர் அடுத்த காரகுப்பத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டியில் இருந்து பர்கூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் காரகுப்பம் ரோட்டில் பல்வேறு இடங்களில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்.

-கனி, பர்கூர், தர்மபுரி.

====

குண்டும், குழியுமான சாலை

சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா முன்பு உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். சில நேரங்களில் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், 4 ரோடு, சேலம்.

===

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்த தின்னனூர் நாடு கிராமத்தில் திட்டகிராய்பட்டியில் இருந்து தேவனூர் செல்லும் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-சிவகுமார், கொல்லிமலை, நாமக்கல்.

====

தெருநாய்கள் தொல்லை

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் ஏழுர் கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாகி உள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அங்கு தெருநாய்கள் சாலையில் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து செல்ல நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொன்னுவேல், ஏழுர், நாமக்கல்.

====

அடிப்படை வசதிகள் இல்லை

சேலம் மாவட்டம் கொளத்தூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 750-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் முட்புதர்கள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமலும் உள்ளது. இதனால் மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மாணவிகளின் நலன் கருதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறையினர் முன் வர வேண்டும்.

-மஞ்சு, கொளத்தூர், சேலம்.

====

பாதாள சாக்கடை குழி மூடி சரிசெய்யப்படுமா?

சேலம் மாநகரத்தில் சாலையின் நடுவே செல்லும் பாதாள சாக்கடை குழியின் மூடிகள் ஆங்காங்கே சேதடைந்துள்ளன. இதனால் வாகனங்கள் பழுதடைந்தும், சில நேரங்களில் விபத்தில் சிக்கியும் வாகன ஓட்டிகள் காயம் அடைகின்றனர். மழைக்காலங்களில் அந்த குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி மழைநீரில் கலந்து விடுகிறது. இதனால் சுகாதார சீ்ர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பாதாள சாக்கடை குழி மூடிகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமல், குகை, சேலம்.

====


Next Story