தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகள் அள்ளப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி-காவேரிப்பட்டணம் மெயின் ரோட்டில் வங்கி அருகே சாலையோரத்தில் குப்பைதொட்டி உள்ளது. அங்கு தினமும் குப்பைகள் அள்ளப்படுவதில்லை. இதனால் குப்பைதொட்டியில் குப்பைகள் குவிந்து சாலையில் சிதறி கிடக்கின்றன. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க ஏற்பாடு செய்வார்களா?
-சிவா, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி.
சாலையோரம் ஆழ்துளை கிணறு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தெற்கு கிரிவலம் பாதை வழியில் சாலையோரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே போக்குவரத்து தடுப்பும் உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவாரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆழ்துளை கிணற்றை சாலைக்குள் அமைத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மா.ஈஸ்வரன், திருச்செங்கோடு, நாமக்கல்.
சேதமடைந்த சாக்கடை கால்வாய்
சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள தெருவில் சாக்கடை கால்வாயின் சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து உள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாக்கடை கால்வாயை சீரமைக்க முன்வருவார்களா?
- அ.எழில், தலைவாசல்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
சேலம் மாவட்டம் இடங்கணசாலையை அடுத்த இ.மேட்டுக்காடு பகுதியில் இருந்து வெள்ளை பிள்ளையார் கோவில் வரை சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, இ.மேட்டுக்காடு, சேலம்.
சுகாதார சீர்கேடு
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சி 8-வது வார்டு ஆல்ரபட்டியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடுகிறது. துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.
-சதீஷ், கம்பைநல்லூர், தர்மபுரி.
சேலம் சன்னியாசிகுண்டு அடுத்த குயில்காடு பகுதியில் மழைநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது அந்த கால்வாயில் கழிவுநீர் செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்பர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை உள்ளது. நோய் பரவ வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
-சுரேஷ், சன்னியாசிகுண்டு, சேலம்.
வாசகர்கள் அமர வசதி இல்லாத நூலகம்
சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு நூலக கட்டிடத்தின் முதல் தளத்தில் 10 பேர் மட்டுமே அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. இதனால் நூலகத்துக்கு வரும் வாசகர்கள் பெரும்பாலானோர் நின்றுகொண்டு படிக்கும் நிலை உள்ளது. அந்த கட்டிடத்தின் 2-வது தளம் பூட்டியே கிடக்கிறது. மேலும் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் முறையாக அடுக்கி வைக்காததால், தேடி எடுத்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நூலகத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் அமர்ந்து படிக்கவும், புத்தகங்கள் வரிசையாக வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.
-அருண்குமார், ஓமலூர்.
விரிசல் விழுந்த ரேஷன் கடை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் சின்னாகவுண்டம்பட்டியில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் விழுகின்றன. இதனால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும், பணியாளர்களும் அச்சத்துடனே இருக்கிறார்கள். எனவே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடையின் கட்டிடத்தை சீரமைத்து தர அதிகாரிகள் முன் வரவேண்டும்.
-ராஜேந்திரன், சின்னாகவுண்டம்பட்டி, சேலம்.