புகார் பெட்டி
`தினத்தந்தி' புகார் பெட்டி
`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
நெல்லை கோர்ட்டு எதிரே காமராஜநகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வடிகால் தூர்ந்து போய் இருந்தது. இதனால் அந்த பகுதியில் தோண்டப்பட்ட குழியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு சண்முகசுந்தரம் அனுப்பிய பதிவு நேற்று பிரசுரம் ஆனது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். அதன்பேரில், அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதியை சீரமைத்துள்ளனர். இதற்காக `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
குடிநீர் குழாயில் பழுது
பாளையங்கோட்டை யூனியன் மேலத்திடியூர் பஞ்சாயத்து கங்கைநாடார்குளம் கிராமத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டிக்கு குடிநீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மோட்டார் குழாய் பழுதாகி உடைந்து விட்டது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, இதை சரிசெய்ய கேட்டுக்கொள்கிறேன்.
-கருப்பசாமி, கங்கைநாடார்குளம்.
குப்பைவண்டி பயன்பாட்டுக்கு வருமா?
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி பகுதியில் குப்பை அள்ளுவதற்காக 3 வண்டிகள் பயன்பாட்டில் இருந்தன. பேட்டரி மூலம் இயங்கும் அந்த வண்டிகளை பயன்படுத்தி குறுகலான தெருக்களுக்கும் சென்று குப்பை அள்ளி வருகின்றனர். தற்போது அதில் ஒரு வண்டி பழுதடைந்து விட்டது. அதை சரிசெய்யாமல் அப்படியே போட்டு விட்டனர். இதனால் தெருக்களில் முன்பு போல் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதன்மூலம் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, பழுதடைந்து கிடக்கும் அந்த குப்பை வண்டியை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-மாரிமுத்து, மூலைக்கரைப்பட்டி.
புகார் பெட்டி செய்தி எதிரொலி
பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி தெருவில் கழிவுநீர் சாக்கடையில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு வாசகர் ராஜா முகம்மது அனுப்பிய பதிவு நேற்று பிரசுரம் ஆனது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்துள்ளனர். இதற்காக `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
பஸ் வசதி வேண்டும்
தென்காசி மாவட்டம் மருக்காலங்குளம்-குற்றாலம் செல்லக்கூடிய அரசு பஸ் `194 டி' வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல், சுரண்டை, தென்காசி வழியாக குற்றாலத்துக்கு மாலையில் செல்கிறது. இந்த பஸ்சை காலை 7 மணிக்கு மருக்காலங்குளத்தில் இருந்து இதே வழித்தடத்தில் இயக்கினால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் பயன் அடைவார்கள். எனவே, காலை 7 மணிக்கு மருக்காலங்குளத்தில் இருந்து அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.
-தட்சிணாமூர்த்தி, கீழக்கலங்கல்.
சேதம் அடைந்த குடிநீர் தொட்டி
ஆலங்குளம் தாலுகா ஓடைமறிச்சான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உடையாம்புளி கிராமத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி மிகவும் சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-பார்த்திபன், உடையாம்புளி.
வேகத்தடையில் வர்ணம் இல்லை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எட்டயபுரம் மெயின்ரோட்டில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். இதுபோல் தினமும் பலருக்கு காயம் ஏற்படுகிறது. எனவே, வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்.
-பொன்ராஜ், கோவில்பட்டி.
சீரமைக்காத சுகாதார நிலையம்
உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பில் சுகாதார நிலையம் உள்ளது. இதை சுற்றி குப்பைகள் குவிந்து கிடக்கிறது. கழிவறைக்கு கதவுகள் இல்லை. இடிந்து விழும் நிலையில் கட்டிடம் உள்ளது. எனவே, இதை முழுமையாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுகிறேன்.
-சரவணன், உடன்குடி.
சேதம் அடைந்த பாலம்
ஏரல்-புதுக்கோட்டை வழியில் உள்ள நட்டாத்தி ஊராட்சி சின்ன நட்டாத்தியில் உள்ள பாலம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இந்த பாலத்தில் மின்விளக்கு வசதி, தடுப்பு சுவர் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே, சேதம் அடைந்த பாலத்தை சீரமைத்து மின்விளக்கு வசதி செய்து தர கேட்டுக்கொள்கிறேன்.
-மந்திரராஜ், சின்னநட்டாத்தி.