தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 10-வது வார்டு காளியப்பர் தெருவில் நல்ல தண்ணீர், உப்பு தண்ணீர் குழாய்கள் உள்ளன. இதில் நல்ல தண்ணீர் குழாயில் நல்லி திறந்து மூடும் நிலையில் இல்லாததால் குடிநீர் வீணாக சென்றது. இதுகுறித்து கோவில்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் நல்லி மாற்றி உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

பூங்கா சீரமைக்கப்படுமா?

நெல்லை கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி கே.டி.சி.நகர். இங்குள்ள கிரஸண்ட் நகரில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் தற்போது பராமரிப்பு இல்லாமலும், விளையாட்டு உபகரணங்கள் போதிய அளவில் இல்லாமலும் இருக்கிறது. எனவே, இந்த பூங்காவை சீரமைத்து சிறுவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். ராமையா, கே.டி.சி.நகர்.

குடிநீர் வசதி வேண்டும்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தின் 1, 2-வது நடைமேடையில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை. ரெயில் பயணத்துக்கு காத்திருக்கும் பயணிகள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். ஆகவே, இங்கு காத்திருக்கும் பயணிகளுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். கணேசன், கீழக்கலங்கல்.

தபால் அலுவலகம் மாற்றப்படுமா?

குற்றாலம் மெயின் அருவிக்கு அருகே பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் தபால் அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. முக்கியமான பகுதியில் இருந்ததால் தபால் அலுவலகத்தை பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது குற்றாலம் ராமாலயத்திற்கு இந்த தபால் அலுவலகம் மாற்றப்பட்டு உள்ளது. இந்த பகுதி ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ளதால் பொதுமக்கள் சென்று வர சிரமப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த தபால் அலுவலகத்தை நகரின் முக்கிய பகுதிக்கும், பொதுமக்கள் வந்து செல்ல வசதியான பகுதிக்கும் மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அம்பலவாணன், குற்றாலம்.

சாலையின் நடுவே இரும்பு தடுப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அகிலாண்டபுரம் கரிசல்குளம் விலக்கு பகுதியில் நாற்கர சாலையின் நடுவே இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி அந்த பகுதியில் உள்ள இரும்பு தடுப்பை அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். முருகன், கோவில்பட்டி.

பஸ்கள் நின்று செல்லுமா?

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் தடம் எண் 134 அரசு பஸ், சாத்தான்குளத்திற்கு செல்லும் தடம் எண் 137 அரசு பஸ்கள் அனைத்து எல்.எஸ்.எஸ்., எஸ்.எப்.எஸ்., எக்ஸ்பிரஸ் என்ற பெயர்களில் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் ஆதிச்சநல்லூர் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிற்பது இல்லை. முக்கிய ஊர்களில் மட்டுமே நின்று செல்கிறது. இதனால் இந்த பஸ்களை நம்பி இருக்கும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்த பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? சண்முகவேல், ஆதிச்சநல்லூர்.

குப்பைகளால் பொதுமக்கள் அவதி

கோவில்பட்டி ராஜீவ்நகர் 6-வது தெருவின் நுழைவு வாயில் பகுதியில் குடியிருப்பு அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டும், பொதுமக்கள் அதை சுற்றி சாலையில் குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். மேலும், இரவில் அந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீவைத்து செல்கிறார்கள். இதனால் புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இந்த குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். செல்வம், கோவில்பட்டி.


Next Story